Bible Language

Zechariah 5 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன்.
2 தூதன் என்னிடம், "என்ன பார்க்கிறாய்?" எனக் கேட்டான். "நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது" என்று நான் சொன்னேன்.
3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: "அந்த புத் தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச் சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது.
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்."
5 பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், "பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?" என்று கேட்டான்.
6 நான் "இது என்னவென்று அறியேன்" என சொன்னேன். அவன், "இது ஒரு அளவு பார்க்கும் வாளி" என்று சொன்னான். அதோடு அவன், "அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி" என்று சொன்னான்.
7 வாளியை மூடியிருந்த ஈயத்தினாலான மூடி அகற்றப்பட்டது. வாளிக்குள் ஒரு பெண் உட் கார்ந்துகொண்டிருந்தாள்.
8 தூதன், "இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்" என்றான். பின்னர் தூதுன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும்.
9 பின்னர் நான் ஏறிட்டுப்பார்த்தேன். நான் இரண்டு பெண்கள் நாரையைப் போன்ற சிறகுகளுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பறந்து போனார்கள். சிறகுகளிலுள்ள காற்றால் வாளியை தூக்கிப் போயினர். அவர்கள் வாளியை தூக்கிக் கொண்டு காற்றில் பறந்தனர்.
10 பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், "அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?" என்றேன்.
11 தூதன் என்னிடம், "அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்" என்றான்.