1 யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவத்தாம், ஆக்காஸ், எசெக்கியாஸ் ஆகியோரின் நாட்களிலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாஸ் என்பவனின் மகன் யெரொபோவாமின் நாட்களிலும் பேயேரி என்பவனின் மகனான ஓசேயுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் திருவாக்கு இதுவே.
2 ஆண்டவர் ஓசேயின் வாயிலாக முதலில் பேசிய போது, ஆண்டவர் ஓசேயை நோக்கி, "நீ போய் வேசிப்பெண் ஒருத்தியை மணந்து, வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது" என்றார்.
3 அவ்வாறே அவர் போய், தேபெலாயிம் என்பவனின் மகள் கோமேர் என்பவளை மணந்து கொண்டார்; அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றாள்.
4 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "குழந்தைக்கு எஸ்ராயேல் என்று பெயரிடு; ஏனெனில், இன்னும் சிறிது காலத்தில், எஸ்ராயேலின் இரத்தப் பழிக்காக ஜேயு குடும்பத்தைப் பழிவாங்குவோம்; மேலும் இஸ்ராயேலின் அரசுக்கு ஒரு முடிவுகட்டுவோம்.;
5 அந்நாளில், எஸ்ராயேல் பள்ளத்தாக்கில் இஸ்ராயேலின் வில்லை முறித்துப் போடுவோம்" என்றார்.
6 கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, "இவளுக்கு 'அன்பு பெறாதவள்' என்று பெயரிடு; ஏனெனில், இஸ்ராயேல் வீட்டின் மீது இனி மேல் அன்பு காட்டவே மாட்டோம்.
7 ஆனால் யூதா வீட்டின் மீது அன்பு காட்டி, அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் பேரால் அவர்களை மீட்போம்; வில், வாள், போர், குதிரைகள் கொண்டு நாம் அவர்களை மீட்கப்போவதில்லை" என்றார்.
8 'அன்பு பெறாதவள்' பால் மறந்த பின்பு கோமேர் திரும்பவும் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றாள்;
9 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "இவனுக்கு 'எம் மக்கள் அல்லர்' என்று பெயரிடு; ஏனெனில், நீங்கள் எம் மக்களல்லீர், நாமும் உங்கள் கடவுளல்லோம்" என்றார்.
10 ஆயினும் இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை, அளக்கவோ எண்ணவோ இயலாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும்; "நீங்கள் எம் மக்களல்லீர்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதற்கு மாறாக, "உயிருள்ள கடவுளின் மக்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
11 யூதாவின் மக்களும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர்; தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு நாடு பிடிக்க எழும்புவார்கள்; அதுவே இஸ்ராயேலின் மாபெரும் நாள்.