Bible Versions
Bible Books

:

1 அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்: “யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது; யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது. என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது; ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன்.
2 “யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை; எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை, உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை.
3 “மேட்டிமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். உனது வாய் அகங்காரமானதைப் பேசாதிருக்கட்டும்; யெகோவாவே எல்லாம் அறிந்த இறைவன்; அவர் செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
4 “வீரரின் வில்லுகள் முறிந்தன; ஆனால் இடறி விழுந்தவர்கள் பலத்தைத் தரித்திருக்கிறார்கள்.
5 நிறைவடைந்தோர் உணவுக்காகக் கூலி வேலைசெய்கிறார்கள்; பசியோடிருந்தவர்களோ இனி பசியோடிருக்கமாட்டார்கள். மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; ஆனால் அநேக மகன்களைப் பெற்றவளோ நலிந்துபோனாள்.
6 “சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
7 வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே; தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
8 அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார், வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார், ஒரு மகிமையான அரியணையை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார். “பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை; அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார்.
9 தமது பரிசுத்தரின் பாதங்களைப் பாதுகாப்பார்; கொடியவர் இருளில் மெளனமாவார்கள். “பெலத்தினால் ஒருவனும் வெற்றிகொள்வதில்லை;
10 யெகோவாவை எதிர்ப்பவர்கள் நொறுக்கப்படுவார்கள். அவர் வானத்திலிருந்து அவர்களுக்கெதிராய் முழங்குவார்; யெகோவா பூமியின் கடையாந்தரங்கள்வரை நியாயந்தீர்ப்பார். “தனது அரசனுக்கு வல்லமையைக் கொடுப்பார்; தாம் அபிஷேகித்தவரின் தலையை உயர்த்துவார்.”
11 அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
12 ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். *பொல்லாதவர்களாயிருந்தார்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
13 மக்களில் எவராவது பலி செலுத்தும்போது, இறைச்சி வேகும் வேளையில் ஆசாரியனின் பணியாளன் ஒருவன், மூன்று கூருள்ள ஒரு கரண்டியைக் கொண்டுவருவது அவர்களின் நடைமுறையாயிருந்தது.
14 பணியாளன் இறைச்சி வேகும் சட்டியிலோ, கிண்ணத்திலோ, அண்டாவிலோ, பானையிலோ அந்த கரண்டியை உள்ளேவிட்டுக் குத்துவான். அப்பொழுது ஆசாரியன் அந்த கரண்டியால் குத்தி எடுப்பது எதுவோ அதைத் தனக்கென எடுத்துக்கொள்வான். இவ்விதமாக சீலோவுக்கு வருகிற இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் இப்படியே நடத்தினார்கள்.
15 மேலும், பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன்னரே ஆசாரியனின் பணியாள் பலி செலுத்துபவனிடம் வந்து, “ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி கொஞ்சம் இறைச்சி கொடு; அவர் பச்சை இறைச்சியே அல்லாமல், வேகவைத்த இறைச்சியை உன்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்பான்.
16 அப்பொழுது பலிசெலுத்துபவன் பணியாளனிடம், “கொழுப்பு முதலில் எரிக்கப்படட்டும். அதன்பின் நீ விரும்பிய எதையும் எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு பணியாளன், “இல்லை, இப்பொழுதே கொடு; கொடுக்காவிட்டால் நான் பலவந்தமாய் அதை எடுத்துக்கொள்வேன்” என்பான்.
17 இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள்.
18 சிறுவனாகிய சாமுயேல் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தான்.
19 அவனுடைய தாய் தங்கள் வருடாந்த பலியைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் தன் கணவனுடன் அங்கே வரும்போது, சாமுயேலுக்கு ஒரு சின்ன அங்கியைத் தைத்துக் கொண்டுவருவாள்.
20 அவ்வேளை ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து அவர்களிடம், “இப்பெண் யெகோவாவிடம் மன்றாடிப்பெற்று, யெகோவாவுக்கே திரும்பக் கொடுத்த தனது பிள்ளைக்குப் பதிலாக, அவர் இவள்மூலம் உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பராக” என்பான். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள்.
21 அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான்.
22 இப்பொழுது அதிக வயதுசென்று கிழவனாயிருந்த ஏலி, தன் பிள்ளைகள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்துவந்த தீமைகளையும், சபைக்கூடார வாசலில் பணிபுரியும் பெண்களுடன் தகாத உறவுகொள்வதையும் கேள்விப்பட்டான்.
23 எனவே அவன் தன் பிள்ளைகளிடம், “நீங்கள் இப்படிப்பட்ட செயல்களை ஏன் செய்கிறீர்கள்? நான் எல்லா மக்களிடமிருந்தும் உங்கள் கொடுமையான செயல்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்.
24 என் பிள்ளைகளே, வேண்டாம். யெகோவாவின் பிள்ளைகளின் மத்தியில் பரவுவதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
25 ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், இறைவன் அவர்களுக்கு நடுவராய் இருக்கக்கூடும். ஒரு மனிதன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காகப் பரிந்து பேசுவது யார்?” என்றான். ஏலியின் மகன்களோ தங்கள் தகப்பனின் கண்டனத்திற்குச் செவிகொடுக்கவில்லை. அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பது யெகோவாவின் சித்தமாயிருந்தது.
26 ஆனால் சிறுவன் சாமுயேலோ பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்தான்.
27 அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா?
28 இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன்.
29 எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’
30 “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள்.
31 உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான்.
32 அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான்.
33 என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான்.
34 “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
35 அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான்.
36 அப்பொழுது உன் வழித்தோன்றலில் மீதியாயிருப்பவன் ஒவ்வொருவனும் அவன் முன்வந்து பணிந்து ஒரு வெள்ளிக் காசுக்காகவும், ஒரு துண்டு அப்பத்துக்காகவும் கெஞ்சி, “நான் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும்படி ஆசாரியனுக்குரிய ஏதாவது ஒரு பணியை எனக்குக் கொடுக்கவேண்டும்” என்று கேட்பான்’ என்றான்.”
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×