Bible Versions
Bible Books

:

1 மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் மக்களுக்குக் கட்டளையிட்டதாவது: “இன்று நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள்.
3 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் *செழிப்பான நாடு. நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள்.
4 நீங்கள் யோர்தானைக் கடந்துபோகும்போது, இன்று உங்களுக்கு நான் கட்டளையிட்டபடியே ஏபால் மலையில் இந்தக் கற்களை நாட்டி, அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.
5 அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கற்களினால் ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். இரும்பு ஆயுதங்கள் எதையும் அதன்மேல் பயன்படுத்த வேண்டாம்.
6 வெட்டப்படாத கற்களால் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிபீடத்தைக் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள்.
7 அங்கே சமாதான காணிக்கைகளையும் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.
8 நீங்கள் நாட்டிய இந்தக் கற்களின்மேல் இந்த சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் மிகத் தெளிவாக எழுதவேண்டும்” என்றார்கள்.
9 அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள்.
10 ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள்.
11 மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:
12 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும்.
13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
14 அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது:
15 “யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
16 “தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
17 “அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
18 “குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
19 “அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
20 “தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
21 “எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
22 “தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
23 “தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
24 “இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
25 “குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
26 “இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×