Bible Versions
Bible Books

:

1 அநீதியான சட்டங்களை இயற்றி, ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
2 அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும், என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும், விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும், அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.
3 உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும், தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்? யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்?
4 கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும், கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
5 “எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கையில் எனது கடுங்கோபத்தின் தண்டாயுதம் இருக்கிறது.
6 நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி, எனக்குக் கோபமூட்டும் மக்களைக் கொள்ளையிட்டு சூறையாடி, பறித்து, தெருவிலுள்ள சேற்றை மிதிப்பதுபோல் அவர்களை மிதித்துப் போடவும் நான் அவனுக்கு கட்டளை கொடுக்கிறேன்.
7 ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல; அவனுடைய மனதில் இருப்பதும் இதுவல்ல, பல நாடுகளை அழித்து அவர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவனுடைய நோக்கம்.
8 அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?
9 கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆகவில்லையா? சமாரியா தமஸ்குவைப்போல் ஆகவில்லையா?
10 எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட சிறந்த உருவச்சிலைகளின் அரசுகளை நான் கைப்பற்றினேன்.
11 சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல, எருசலேமுக்கும், அதன் விக்கிரகங்களுக்கும் செய்யமாட்டேனோ?’ ”
12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார்.
13 ஏனெனில் அவன் சொல்கிறதாவது: “ ‘எனது கரத்தின் வல்லமையாலும், எனது ஞானத்தினாலும் அறிவினாலும் நான் இதைச் செய்தேன், நான் பல நாடுகளின் எல்லைகளை அகற்றினேன், அவர்களுடைய செல்வங்களைச் சூறையாடினேன், பெரும் வல்லவனைப்போல் அவர்களின் அரசர்களை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன்.
14 ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல், நாடுகளின் செல்வத்தை எடுப்பதற்கு என் கை நீட்டப்பட்டது. கைவிடப்பட்ட முட்டைகளை மனிதர் சேர்ப்பதுபோல், எல்லா நாடுகளையும் நான் ஒன்றாகச் சேர்த்தேன். ஒன்றாவது சிறகை அடிக்கவுமில்லை, கூச்சலிடுவதற்காக வாயைத் திறக்கவுமில்லை.’ ”
15 கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ? வாள் தன்னை உபயோகிக்கிறவனுக்கு மேலாகத் தற்பெருமை கொள்ளுமோ? அப்படியானால், வீசி அடிப்பதற்காக ஒருவன் ஒரு தடியை எடுக்க, அந்தத் தடியோ தன்னை எடுத்தவனையே தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே. மரத்தாலான தண்டாயுதம், தானாகவே எழுந்து நின்று, மரமல்லாத மனிதனைத் தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே.
16 ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா அவனுடைய பலமுள்ள இராணுவவீரர்களுக்குள் உருக்கும் நோயை அனுப்புவார். அவனுடைய பகட்டான ஆடம்பரத்தின்கீழ் எரியும் சுவாலை போன்ற தீயை மூட்டுவார்.
17 இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும், அவர்களுடைய பரிசுத்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும் வருவார். அவர் அவனுடைய முட்செடிகளையும், அவனுடைய நெருஞ்சில் செடிகளையும் ஒரே நாளில் எரித்துப்போடுவார்.
18 நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல, அவனுடைய காடுகளிலும் வளமுள்ள வயல்களிலும் உள்ள செழிப்பு முற்றிலும் அழிந்துவிடும்.
19 அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை, ஒரு சிறுபிள்ளைகூட எண்ணக்கூடியதாய் குறைந்திருக்கும்.
20 அந்த நாளில் இஸ்ரயேலில் மீதியிருப்போரும், யாக்கோபின் குடும்பத்தில் தப்பியிருப்போரும் *அசீரியாவின் அரசன் தங்களை முறியடித்தவன்மேல் இனியொருபோதும் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். ஆனால் இஸ்ரயேலின் பரிசுத்தராகிய யெகோவாவிலேயே உண்மையான நம்பிக்கையை வைப்பார்கள்.
21 மீதியிருப்பவர்கள் திரும்புவார்கள், யாக்கோபின் குடும்பத்தில் மீதியிருப்பவர்கள் வல்ல இறைவனிடம் திரும்புவார்கள்.
22 இஸ்ரயேலே, உன் மக்கள் இப்பொழுது கடற்கரை மணல்போல் இருந்தபோதிலும், மீதமிருக்கும் சிலர் மட்டுமே திரும்புவார்கள். மூழ்கடிக்கும் அழிவு ஒன்று கட்டளையிடப்பட்டிருக்கிறது; அது நீதியானது.
23 நாடு முழுவதற்கும் கட்டளையிடப்பட்ட அழிவை யெகோவா, சேனைகளின் யெகோவா நிறைவேற்றுவார்.
24 ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் வாழும் என் மக்களே, எகிப்தியர் செய்ததுபோல, உங்களைப் பிரம்பால் அடித்து, தண்டாயுதத்தை உயர்த்துகிற அசீரியருக்குப் பயப்படவேண்டாம்.
25 உங்களுக்கு விரோதமாக இருக்கும் என் கோபம், வெகுவிரைவில் முடிந்துவிடும். எனது கோபமோ, சீரியர்களுடைய அழிவை நோக்கித் திருப்பப்படும்.”
26 ஓரேப் மலையில் மீதியானியரை அடித்து வீழ்த்தியதுபோல, சேனைகளின் யெகோவா அவர்களைச் சவுக்கால் அடிப்பார். எகிப்தில் செய்ததுபோல, தம் கோலை கடலின்மேல் உயர்த்துவார்.
27 அந்த நாளில் அசீரியனால் உங்களுக்கு உண்டான சுமையோ, உங்கள் தோள்களில் இருந்து நீக்கப்படும்; அவர்களுடைய நுகம் உங்கள் கழுத்திலிருந்து அகற்றப்படும், நீங்கள் கொழுத்திருக்கிறபடியால் நுகம் முறிந்துவிடும்.
28 அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள். மிக்ரோனு வழியாகப் போகிறார்கள் மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள்.
29 அவர்கள் கணவாயைத் தாண்டிச் சென்று சொல்கிறதாவது: “நாம் கேபாவில் இரவு தங்குவோம்.” ராமா நடுங்குகிறது; சவுலின் பட்டணமாகிய கிபியாவின் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
30 காலீம் மகளே, ஓலமிடு! லாயிஷாவே, கேள்! பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!
31 மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்; கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
32 இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்; எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின் மேட்டுக்கு விரோதமாய், கைநீட்டி மிரட்டுவார்கள்.
33 பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா, மிக்க வல்லமையோடு பெரிய கிளைகளை வெட்டிவிடுவார். பெரு மரங்கள் வீழ்த்தப்படும், ஓங்கி வளர்ந்த மரங்கள் தாழ்த்தப்படும்.
34 அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×