1 “ஆனால் இப்பொழுதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்; அவர்களுடைய தந்தையரை, நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்ககூடாது என எண்ணினேன்.
2 அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்? அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே!
3 அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து, இரவிலே வெறுமையான வறண்ட நிலத்தில் அலைந்து திரிந்தார்கள்.
4 அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்; காட்டுச்செடிகளின் கிழங்குகளே அவர்களுக்கு ஆகாரம்.
5 கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல், அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
6 அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும், நிலத்தின் பொந்துகளிலும் குடியிருக்க வேண்டியதாயிருந்தது.
7 புதர்களுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள்.
8 அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.
9 “இளைஞர்கள் பாடல்களினாலும், பழமொழியினாலும், என்னை கேலி செய்கிறார்கள்.
10 அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்; அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை.
11 ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால், அவர்கள் என்முன் அடக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள்.
12 வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்; என் பாதங்கள் தவறி விழச்செய்கிறார்கள், எனக்கு விரோதமாக அழிவின் பாதைகளை அமைக்கிறார்கள்.
13 அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; ஒருவருடைய உதவியுமின்றி என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.
14 அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி, இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள்.
15 பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன; காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், என் மேன்மை போய்விட்டது, என் பாதுகாப்பும் மேகத்தைப்போல் இல்லாமல் போகிறது.
16 “இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது; துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
17 இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.
18 இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்; உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது.
19 அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார், நான் தூசியாயும் சாம்பலுமானேன்.
20 “இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்; நான் உமக்கு முன்பாக நிற்கிறேன், நீரோ ஒன்றும் செய்யாமலிருக்கிறீர்.
21 கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்; உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர்.
22 என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்; புயலிலே என்னைச் சுழற்றுகிறீர்.
23 நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும், உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.
24 “மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது, யாரும் உதவிசெய்வதில்லை.
25 கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ? ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ?
26 அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது; நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது.
27 என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை; துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன.
28 நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்; கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன்.
29 நான் நரிகளுக்குச் சகோதரனும், ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன்.
30 என் தோல் கறுத்துப்போயிற்று; என் உடல் காய்ச்சலால் எரிகிறது.
31 என் யாழ் புலம்பலையும், என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது.