Bible Versions
Bible Books

5
:

1 அப்பொழுது அநேகரும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் யூத சகோதரருக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பினார்கள்.
2 சிலர், “நாங்களும், எங்கள் மகன்களும், மகள்களும் அநேகராயிருக்கிறோம், நாங்கள் சாப்பிட்டு உயிருடன் வாழ்வதற்குத் தானியம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.
3 மற்றவர்களோ, “பஞ்சத்தில் தானியம் பெறுவதற்காக எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானமாக வைத்திருக்கிறோம்” என்றார்கள்.
4 வேறுசிலர், “எங்கள் வயல்களுக்கும், திராட்சைத் தோட்டங்களுக்குமான அரச வரியை செலுத்துவதற்குப் போதிய பணத்தை நாங்கள் கடனாகவே பெற்றோம்.
5 நாங்கள் எங்கள் நாட்டவரைப் போலவே ஒரே சதையும், இரத்தமும் உடையவர்களாயிருக்கிறோம்; அவர்களுடைய மகன்களைப்போலவே எங்கள் மகன்களும் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும் எங்கள் மகன்களையும், மகள்களையும் அடிமைகளாக்க வேண்டியுள்ளோம். எங்கள் மகள்களில் சிலர் அடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; எங்கள் வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்களின் கைவசமானபடியால், அவர்களை மீட்க எங்களால் முடியாதிருக்கிறோம்” என்றார்கள்.
6 இவர்களுடைய கூக்குரலையும், குற்றச்சாட்டுகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபமடைந்தேன்.
7 நான் இவற்றை எனக்குள் சிறிது யோசித்துப் பார்த்தபின், உயர்குடி மனிதர், அதிகாரிகள் ஆகியோர்களையும் குற்றப்படுத்தினேன். “உங்கள் சொந்த நாட்டவரிடமிருந்தே நீங்கள் வட்டியை வற்புறுத்தி வாங்குகிறீர்கள்” என்று சொன்னேன். அப்படியே நான் அவர்களுக்கெதிராக ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு பெரிய கூட்டத்தை ஒன்றுகூடிவரச் செய்தேன்.
8 நான் அவர்களிடம், “அந்நிய தேசத்தாருக்கு விற்கப்பட்டிருந்த நமது சகோதரரான யூத மக்களை எங்களால் முடிந்த அளவுக்கு விடுவித்திருக்கிறோம். அப்படியிருக்க இப்பொழுது திரும்பவும் நீங்கள் அவர்களை விற்கிறீர்கள்; அதனால் நாங்கள் அவர்களைத் திரும்பவும் வாங்க வேண்டியிருக்கிறது!” என்று கூறியபோது அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை, அவர்கள் அமைதியாயிருந்தார்கள்.
9 எனவே நான் தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் செய்வது சரியானது அல்ல. நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்காதபடி, நீங்கள் நமது இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமல்லவா?
10 நானும் என் சகோதரர்களும், என் மனிதரும்கூட இந்த மக்களுக்குப் பணத்தையும், தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வற்புறுத்தி வட்டி வாங்குவதை நிறுத்திவிடுங்கள்!
11 நீங்கள் அவர்களிடம் அவர்களுடைய வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும் உடனே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; அத்துடன் நீங்கள் கொடுத்த பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் நூற்றில் ஒரு பங்காக வாங்கும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னேன்.
12 அப்பொழுது அவர்கள், “நாங்கள் அவற்றைத் திருப்பிக் கொடுப்போம், அவர்களிடமிருந்து எதையும் நாங்கள் வற்புறுத்தி வாங்கவும் மாட்டோம். நீர் சொல்வதன்படியே செய்வோம்” என்றார்கள். உடனே நான் ஆசாரியர்களை அழைப்பித்து உயர்குடி மனிதரும், அதிகாரிகளும் தாங்கள் வாக்களித்தபடி செய்யவேண்டுமென்று சொல்லி, ஆணையிடும்படி செய்தேன்.
13 மேலும் நான் எனது ஆடையின் மடிப்புகளை உதறி, அவர்களிடம், “இப்போது செய்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பவனின் வீட்டையும், உடைமைகளையும் இறைவன் இவ்விதமாகவே உதறிப்போடுவாராக. அப்படிப்பட்ட மனிதன் உதறிப்போடப்பட்டு வெறுமையாக்கப்படுவானாக!” என்றேன். அதைக்கேட்ட மக்கள் கூட்டமும், “ஆமென்” என்று கூறி யெகோவாவைத் துதித்தார்கள். மக்கள் தாங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்தார்கள்.
14 மேலும் அர்தசஷ்டா அரசனின் இருபதாம் வருட ஆட்சியில் யூதா நாட்டிற்கு நான் ஆளுநனாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, அர்தசஷ்டாவின் முப்பத்தி இரண்டாம் வருடம்வரை பன்னிரண்டு வருடங்களுக்கு நானோ, என் சகோதரர்களோ ஆளுநர்களுக்கான உணவைச் சாப்பிடவில்லை.
15 எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தி, அவர்களிடமிருந்து நாற்பது சேக்கல் வெள்ளிப் பணத்தையும், அத்துடன் உணவையும், திராட்சை இரசத்தையும் வாங்கிவந்தார்கள். அவர்களுடைய உதவியாளர்களும்கூட அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் நானோ இறைவனுக்குப் பயந்ததினால் அவ்விதம் நடக்கவில்லை.
16 நான் இந்த மதில் வேலைக்கு என்னை அர்ப்பணித்திருந்தேன். எனது வேலைக்காரர்கள் எல்லோரும் அந்த வேலைக்காக அங்கு கூடியிருந்தார்கள்; நாங்கள் எந்த நிலத்தையும் எங்களுக்குச் சொந்தமாக்கவில்லை.
17 மேலும் நூற்றைம்பது யூதர்களும், அதிகாரிகளும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். அத்துடன் சுற்றுப்புற நாடுகளிலிருந்து எங்களிடம் வந்தவர்களும் சாப்பிட்டார்கள்.
18 ஒவ்வொரு நாளும் ஒரு மாடும், ஆறு சிறந்த செம்மறியாடுகளும், சில பறவைகளும் சமைக்கப்பட்டன. பத்து நாட்களுக்கு ஒருமுறை பெருமளவிலான பலரக திராட்சை இரசமும் கொண்டுவரப்பட்டன. இவ்வாறான செலவுகள் ஏற்பட்டபோதும், ஏற்கெனவே மக்கள் மிகுந்த கஷ்டம் அனுபவித்துக் கொண்டிருந்தபடியால், ஆளுநனுக்கு வரவேண்டிய உணவை நான் மக்களிடமிருந்து வற்புறுத்திக் கேட்கவில்லை.
19 “என் இறைவனே, இந்த மக்களுக்காக நான் செய்த எல்லாவற்றையும் நினைத்து, எனக்கு நன்மை செய்யும்” என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×