Bible Versions
Bible Books

:

1 பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே ஆட்டுக்குட்டியானவர், சீயோன் மலையின்மேல் எனக்கு முன்பாய் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 1,44,000 பேர் நின்றார்கள். அவர்களுடைய நெற்றிகளிலே ஆட்டுக்குட்டியானவரின் பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.
2 அப்பொழுது பரலோகத்திலிருந்து, நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகிற வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி, வீணை வாசிக்கிறவர்கள் தங்கள் வீணைகளை வாசிப்பதால் எழும்பிய நாதம்போல் இருந்தது.
3 அந்தப் பெருங்கூட்டம் அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், சபைத்தலைவர்களுக்கு முன்பாகவும், ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர, வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியாதிருந்தது.
4 இவர்கள் தங்களைப் பெண்களால் கறைப்படுத்தாமல், தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அங்கெல்லாம் இவர்கள் அவரையே பின்பற்றுகிறார்கள். இவர்கள் மனிதரிடையே இருந்து வாங்கப்பட்டு, இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்கனியாய் ஒப்படைக்கப்பட்டவர்கள்.
5 இவர்களுடைய வாய்களில் ஒரு பொய்யும் காணப்படவில்லை; இவர்கள் குற்றம் எதுவுமே காணப்படாதவர்கள்.
6 பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது.
7 அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில், அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.
8 இரண்டாவது இறைத்தூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’ *ஏசா. 21:9 அவள் எல்லா நாட்டு மக்களையும் தனது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவைக் குடிக்கப்பண்ணினாள்” என்றான்.
9 மூன்றாவது இறைத்தூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும், மிருகத்தின் உருவச்சிலையையும் வணங்கி, அதனுடைய அடையாளத்தைத் தனது நெற்றியிலோ அல்லது கையிலோ பெற்றுக்கொண்டால்,
10 அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த இறைத்தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான்.
11 அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.”
12 ஆகவே, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், தங்கள் துன்புறுத்தல்களைப் பொறுமையோடு சகிப்பதற்கு, இது உற்சாகமூட்டட்டும்.
13 அப்பொழுது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இதுமுதல், கர்த்தரில் விசுவாசிகளாகவே மரிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெழுது” என்று அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய உழைப்பிலிருந்தும், சோதனையிலிருந்தும் இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.
14 பின்பு நான் பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு வெள்ளை மேகத்தைக் கண்டேன். அந்த மேகத்தின்மேல் மானிடமகனைப் போல், ஒருவர் அமர்ந்திருந்தார். †தானி. 7:13 அவருடைய தலையின்மேல் ஒரு தங்கக்கிரீடமும், கையிலே ஒரு கூரிய அரிவாளும் இருந்தன.
15 அப்பொழுது, இன்னொரு இறைத்தூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து, மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரை உரத்த குரலில் கூப்பிட்டு, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில், பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான்.
16 எனவே மேகங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர், தனது அரிவாளை பூமியின்மேல் நீட்டி அறுவடை செய்தார். அப்பொழுது பூமியின் விளைவு அறுவடை செய்யப்பட்டது.
17 பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து, இன்னொரு இறைத்தூதன் வெளியே வந்தான். அவனும் ஒரு கூரிய அரிவாளை வைத்திருந்தான்.
18 வேறொரு இறைத்தூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கிறவன். அவன் கூரிய அரிவாளை வைத்திருந்த தூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூரிய அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சை கொடியிலிருந்து திராட்சை பழக்குலைகளை அறுத்து சேர்த்துக்கொள்; ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்து ஆயத்தமாகிவிட்டன” என்றான்.
19 அப்பொழுது அந்த இறைத்தூதன், தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான்;
20 அவை நகரத்திற்கு வெளியே, திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையின் வெளியே, இரத்தம் ஒரு நதியாய் ஓடியது; அது குதிரைகளின் கடிவாளத்தின் உயரம் வரைக்கும் எழும்பிப் பெருகி, 300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×