Bible Versions
Bible Books

2
:

1 மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய்.
2 இப்படி நடக்கிறவர்களுக்கு விரோதமான இறைவனுடைய நியாயத்தீர்ப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
3 ஆகவே நீ ஒரு அற்ப மனிதனாயிருந்தும், நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயே. அதே காரியங்களை நீயே செய்யும்போது, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா?
4 அல்லது, இறைவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது என்று உணராமல், அவருடைய தயவு, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றின் நிறைவை ஏளனம் பண்ணுகிறாயா?
5 நீயோ உன் பிடிவாதத்தினாலும், மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் கோபத்தை அவருடைய கோபத்தின் நாளுக்கென குவித்துக்கொண்டு வருகிறாய். அந்த நாளிலே அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படும்.
6 இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பவே பலன் கொடுப்பார்.” *சங். 62:12; நீதி. 24:12
7 நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார்.
8 ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை புறக்கணித்துத் தீமையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கோபமும், உக்கிரகோபமுமே இருக்கும்.
9 தீமைசெய்கிற ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்சனையும் துன்பமுமே இருக்கும்: அது முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்;
10 ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்.
11 ஏனென்றால், இறைவன் பாரபட்சம் காட்டுவதில்லை.
12 யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
13 ஏனெனில் மோசேயின் சட்டத்தைக் கேட்கிறவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள்.
14 உண்மையாகவே யூதரல்லாத மக்களிடம் யூத சட்டம் இல்லாதிருந்தாலும், சட்டம் இல்லாத அவர்கள் சட்டம் சொல்லுகிற காரியங்களை இயல்பாகவே செய்கிறபொழுது, அவர்களே தங்களுக்கான சட்டமாய் இருக்கிறார்கள்.
15 சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது.
16 ஆகவே என்னுடைய நற்செய்தி அறிவிக்கிறபடியே இயேசுகிறிஸ்துவின் மூலமாக, இறைவன் மனிதர்களுடைய இரகசிய சிந்தனைகளைக்குறித்து நியாயந்தீர்க்கும் நாளில் இவ்விதமாக எல்லோருக்கும் தீர்ப்பளிப்பார்.
17 இப்பொழுது நீ உன்னை யூதன் என்று சொல்லிக்கொள்ளுகிறாய். மோசேயின் சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து இறைவனுடன் உனக்குள்ள உறவைக்குறித்து பெருமை பேசுகிறாய்.
18 அவருடைய திட்டத்தை அறிந்து மோசேயின் சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டு இருப்பதனால், மேன்மையானவைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சொல்லிக்கொள்ளுகிறாய்.
19 நீ உன்னை பார்வையற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருக்கிறவர்களுக்கு ஒரு வெளிச்சம் என்றும் திட்டமாய் நம்புகிறாய்.
20 அப்படி மோசேயின் சட்டத்திலுள்ள அறிவின் உள்ளடக்கத்தையும், சத்தியத்தையும் நீ பெற்றுக்கொண்டதால், மூடர்களுக்கு அறிவு புகட்டுகிறவனாகவும், குழந்தைகளுக்கான ஆசிரியனாகவும் இருப்பதாக எண்ணுகிறாய்.
21 ஆகவே, மற்றவர்களுக்குப் போதிக்கிற நீ உனக்கே போதிக்கிறதில்லையா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்கிறாயா?
22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்கிறாயா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ, கோவில்களைக் கொள்ளையிடுகிறாயா?
23 மோசேயின் சட்டத்தைக்குறித்து பெருமை பேசுகிற நீ, மோசேயின் சட்டத்தை மீறுகிறதினால் இறைவனை கனவீனம் பண்ணலாமா?
24 அதனால் வேதத்தில் எழுதியிருக்கிறபடி, “உங்கள் நிமித்தம் யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகிறதே.” †ஏசா. 52:5 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்); எசே. 36:20,22
25 மோசேயின் சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பயனுள்ளதுதான். ஆனால், மோசேயின் சட்டத்தை நீ மீறுகிறபோது, விருத்தசேதனம் செய்யப்படாதவனைப்போல் ஆகிவிடுகிறாய்.
26 விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப்போல எண்ணப்படமாட்டார்களா?
27 தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட அதை மீறுகிறவனாகிவிட்டாயே.
28 வெளித்தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால், அவன் யூதனல்ல; வெறும் வெளித்தோற்றத்திற்காக உடலில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
29 ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன்; எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அல்ல, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்ட மனிதனுக்குரிய புகழ்ச்சி மனிதரிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே வருகிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×