Bible Versions
Bible Books

2 Samuel 6 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {தேவனுடைய பெட்டி எருசலேமிற்குக் கொண்டுவரப்படுதல்} PS பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி,
2 கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய்,
3 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
4 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
5 தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.
6 அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
7 அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.
8 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.
9 தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி,
10 அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
11 யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
12 தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
13 யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
14 தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான்.
15 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
16 யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
17 அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்.
18 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் யெகோவாவுடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து,
19 இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.
20 தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
21 அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
22 இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.
23 அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது. PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×