Bible Versions
Bible Books

Ezekiel 21 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {பாபிலோனும் தேவனின் நியாயத்தீர்ப்பின் வாளும்} PS அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி.
3 இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் நீதிமானையும் துன்மார்க்கனையும் அழிப்பேன்.
4 நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கப்போகிறதினால் தெற்கு துவக்கி வடக்குவரையும் உள்ள எல்லா மாம்சத்திற்கும் எதிராக என்னுடைய வாள் அதின் உறையிலிருந்து புறப்படும்.
5 அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.
6 ஆதலால் மனிதகுமாரனே, உன்னுடைய இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்களுடைய கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு.
7 நீ எதற்காக பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதற்காகவே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல தள்ளாடும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
8 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9 மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: வாள் கூர்மையாக்கப்பட்டது, வாள் கூர்மையாக்கப்பட்டது; அது தீட்டப்பட்டும் இருக்கிறது.
10 பெரிய அழிவுண்டாக்குவதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாக அது தீட்டப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என்னுடைய மகனுடைய கோல், அது எல்லா மரங்களையும் அலட்சியம்செய்யும்.
11 அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்.
12 மனிதகுமாரனே, நீ சத்தமிட்டு கதறு; வாள் என்னுடைய மக்களின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதற்காக என்னுடைய மக்களுக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன்னுடைய விலாவிலே அடித்துக்கொள்.
13 யாவையும் கண்டிக்கிற கோல் வந்தால் தவிர இனிச் சோதனையினால் தீருகிறது என்னவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14 ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள்.
15 அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
16 ஒரே பலமாக வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன்னுடைய முகம் * வாள் திரும்புகிற திசையெல்லாம் வெட்டு.
17 நானும் கையுடன் கைதட்டி, என்னுடைய கடுங்கோபத்தை ஆறச்செய்வேன் என்று யெகோவாகிய நான் சொன்னேன் என்றார்.
18 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
19 மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.
20 வாள் அம்மோனியர்களின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற பாதுகாப்பான எருசலேமுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும் குறித்துக்கொள்.
21 பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான்.
22 தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
23 இந்த குறியானது வாக்கு கொடுத்தவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்களுடைய துரோகத்தை நினைப்பான்.
24 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள்.
25 இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் உன்னுடைய நாள் வந்தது.
26 தலைப்பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்பு போல இருக்காது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன்.
27 அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வரும்வரை அது இல்லாமல் இருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
28 பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,
29 அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலைசெய்யப்பட்டு போனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழச்செய்யும்படி, உனக்கு பொய்யானது பார்க்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்குறி பார்க்கப்படுகிறபோதும் வாள் உருவப்பட்டது, வாளே உருவப்பட்டது; வெட்டவும், அழிக்கவும் அது மின்னக்கூடியதாகத் தீட்டப்பட்டிருக்கிறது.
30 உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
31 என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
32 நீ நெருப்புக்கு இரையாவாய்; உன்னுடைய இரத்தம் உன்னுடைய தேசத்தின் நடுவில் சிந்தப்படும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×