Bible Versions
Bible Books

Nehemiah 4 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு} PS நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
2 அந்த அற்பமான யூதர்கள் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளில் முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியாவின் படைக்கும் முன்பாகச் சொன்னான்.
3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
5 அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
6 நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
7 எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து,
8 எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.
9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
10 அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள்.
11 எங்களுடைய எதிரிகளோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடும்வரை, அவர்கள் அதை அறியாமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாக அந்த வேலையை நிறுத்துவோம் என்றார்கள்.
12 அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள்.
13 அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன்.
14 அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன்.
15 எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16 அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதி ஆட்கள் வேலை செய்தார்கள், பாதி ஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள்.
17 மதிலை கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையிலே வேலைசெய்து, மறுகையிலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
18 கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.
19 நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
20 நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன்.
21 இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
22 அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
23 நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ஆயுதங்களையும் தண்ணீரையும் வைத்திருந்தார்கள். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×