Bible Versions
Bible Books

Ezekiel 31 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {லீபனோனிலுள்ள கேதுரு} PS பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?
3 இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
4 தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது.
5 ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது.
6 அதின் கிளைகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கிளைகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டது; பெரிதான எல்லா தேசகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
7 அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது.
8 தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கமுடியாமல் இருந்தது; தேவதாரு மரங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு மரமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
9 அதின் அடர்ந்த கிளைகளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் மரங்களெல்லாம் அதின்மேல் பொறாமைகொண்டன.
10 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன்னுடைய வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன்னுடைய நுனிக்கிளையை உயர வளரச்செய்ததாலும், அதின் இருதயம் தன்னுடைய மேட்டிமையினால் உயர்ந்துபோனதினாலும்,
11 நான் அதைத் தேசங்களில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு விருப்பமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்திற்காக அதைத் தள்ளிப்போட்டேன்.
12 தேசங்களில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்.
13 விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கினது; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
14 தண்ணீரின் ஓரமாக வளருகிற எந்த மரங்களும் தங்களுடைய உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்களுடைய கொப்புகளின் தழைக்குள்ளே தங்களுடைய நுனிக்கிளையை உயர வளரவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்களுடைய உயரத்தினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்படி இப்படிச் செய்வேன்; மனிதகுமாரர்களின் நடுவே அவர்கள் எல்லோரும் குழியில் இறங்குகிறவர்களுடன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
15 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது.
16 நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன.
17 அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.
18 இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×