Bible Versions
Bible Books

:
-

1 கீரியாத்யாரீம் ஜனங்கள் வந்து கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் அதனை பாறைமேல் இருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். கர்த்தருடைய பெட்டியைக் காக்க அபினதாபின் மகன் எலெயாசாருக்கு அவர்கள் சிறப்பான சடங்குகளைச் செய்தார்கள்.
2 பெட்டி கீரியாத்யாரீமிலேயே 20 ஆண்டுகள் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தரைப் பின்பற்ற தொடங்கினார்கள்.
3 சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான்.
4 எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.
5 சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.
6 இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான்.
7 பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள்.
8 அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.
9 சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார்.
10 சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர்.
11 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.
12 இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான்.
13 பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார்.
14 பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக்கைப் பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர். இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.
15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றான்.
16 இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான்.
17 அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×