Bible Versions
Bible Books

:

1 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான். அவர்களை அனுப்ப மிக்க ஆயத்தத்தோடு இருப்பான். அவர்கள் போகும்படியாக அவன் கட்டாயப்படுத்துவான்” என்றார்.
2 பின், தேவன் மோசேயை நோக்கி, “நானே கர்த்தர்.
3 நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை.
4 நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல.
5 இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன்.
6 எனவே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, ‘நானே கர்த்தர். நான் உங்களை மீட்பேன். நான் உங்களை விடுவிப்பேன். எகிப்தியர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கமாட்டீர்கள். எனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தி, எகிப்தியருக்குப் பயங்கரமான தண்டனை அளிப்பேன். பின், உங்களை மீட்பேன்.
7 நீங்கள் எனது ஜனங்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாக இருப்பேன். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டேன் என்பதை அறிவீர்கள்.
8 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் பண்ணனேன். அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். எனவே உங்களை அத்தேசத்திற்கு வழிநடத்துவேன். உங்களுக்கு அத்தேசத்தைத் தருவேன், அது உங்களுடையதாக இருக்கும். நானே கர்த்தர்!’ என்று கூறியதாகச் சொல்லுங்கள்” என்றார்.
9 மோசே இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறினான். ஆனால் ஜனங்கள் அதற்குச் செவிசாய்க்கவிலை. அவர்கள் மிகக் கடினமாக உழைத்ததால் மோசேயிடம் பொறுமையிழந்து காணப்பட்டார்கள்.
10 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி,
11 “பார்வோனிடம் போய் இஸ்ரவேல் ஜனங்களை தனது தேசத்திலிருந்து போகவிடும்படியாகக் கூறு” என்றார்.
12 ஆனால் மோசே, “இஸ்ரவேல் ஜனங்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்கமாட்டான். நான் பேச திறமையில்லாதவன்” என்று பதில் கூறினான்.
13 ஆனால் கர்த்தர் மோசேயோடும், ஆரோனோடும் பேசினார். இஸ்ரவேல் ஜனங்களிடமும், பார்வோனிடமும் சென்று பேசுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துமாறும் அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார்.
14 இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களில் சிலருடைய பெயர்கள் இங்குத் தரப்படுகின்றன: இஸ்ரவேலின் முதல் மகன் ரூபனுக்கு நான்கு மகன்கள். அவர்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர்.
15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் ஆகியோர். (சவுல் கானானிய பெண்ணின் மகன்.)
16 லேவி 137 ஆண்டுகள் வாழ்ந்தான். கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் ஜனங்கள்.
17 கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.
18 கோகாத் 133 ஆண்டுகள் வாழ்ந்தான். கோகாத்தின் ஜனங்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.
19 மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மகன் லேவியிலிருந்து வந்தவை.
20 அம்ராம் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் தன் தந்தையின் சகோதரியாகிய யோகெபேத்தை மணந்தான். அம்ராமும் யோகெபேத்தும், ஆரோனையும் மோசேயையும் பெற்றனர்.
21 கோராகு, நெப்பேக், சித்ரி ஆகியோர் இத்சேயாரின் மகன்கள்.
22 மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் மகன்கள்.
23 எலிசபாளை ஆரோன் மணந்தான். (எலிசபா அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமாவாள்.) ஆரோனும் எலிசபாளும் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரைப் பெற்றனர்.
24 ஆசீர், எல்க்கானா, அபியாசாப் ஆகியோர் கோராகின் ஜனங்களும் கோராகியரின் முற்பிதாக்களும் ஆவார்கள்.
25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தயேலின் மகள் ஒருத்தியை மணந்தான். அவள் பினெகாசைப் பெற்றெடுத்தாள். இந்த ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் குடும்பத்தினராவார்கள்.
26 ஆரோனும் மோசேயும், இந்த கோத்திரத்திலிருந்து வந்தனர். அவர்களிடம் தேவன் பேசி, “குழுக்களாக என் ஜனங்களை வழிநடத்து” என்றார்.
27 ஆரோனும், மோசேயும் எகிப்து மன்னன் பார்வோனிடம் பேசினார்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் பார்வோனிடம் கூறினார்கள்.
28 எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார்.
29 அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து அரசனிடம் சொல்” என்றார்.
30 ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். அரசன் எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×