Bible Versions
Bible Books

:

1 ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.
2 ஒரு நாள், அகசியா தன் வீட்டின் மேல்மாடியில் இருந்தான். அப்போது மரச் சட்டங்களாலான கிராதியின் வழியாகக் கீழே விழுந்துவிட்டான். அவனுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. அவன் தன் வேலையாட்களை அழைத்து அவர்களிடம், “எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய், அவர்கள் ஆசாரியர்களிடம், இந்த காயங்களில் இருந்து குணமடைவேனா” என்று விசாரித்து வரும்படி சொன்னான்.
3 ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை அரசன் அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்?
4 அரசன் அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான்.
5 தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6 அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய அரசனிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க அரசன் தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’ ” என்றனர்.
7 அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.
8 அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர். பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான்.
9 அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு அரசர் சொல்கிறார்” என்றான்.
10 எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான். அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.
11 அகசியா இன்னொரு தளபதியையும் 50 பேரையும் அனுப்பிவைத்தான். அத்தளபதியும், “தேவமனிதனே! நீங்கள் விரைவாக கீழே இறங்கவேண்டும் என்று அரசர் சொல்கிறார்!” என்றான்.
12 அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான். பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது.
13 அகசியா மூன்றாவதாக ஒரு தளபதியை 50 ஆட்களுடன் அனுப்பிவைத்தான். அவர்களும் எலியாவிடம் வந்தனர். பின் தளபதி, “தேவமனிதனே, என்னுடைய உயிரையும், உங்கள் ஊழியர்களாகிய இந்த 50 பேருடைய உயிர்களையும் காப்பாற்றுங்கள்.
14 பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
15 கர்த்தருடைய தூதன் எலியாவிடம், “தளபதியோடு செல், அவனைக்கண்டு பயப்படவேண்டாம்” என்றான். எனவே எலியா அரசனான அகசியாவைப் பார்க்கத் தளபதியோடு போனான்.
16 எலியா அகசியாவிடம், “தேவன் இப்படிக் கூறுகிறார். அதாவது: இஸ்ரவேலில் தேவன் இருக்கிறார். அவரிடம் கேட்காமல் ஏன் எக்ரோனின் தேவனான பாகால் சேபூபிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறாய். நீ இவ்வாறு செய்ததால் நோய் குணமாகாமல் படுத்தப்படுக்கையிலேயே மரித்துவிடுவாய்!” என்றான்.
17 எலியாவின் மூலமாக, கர்த்தர் சொன்னது போல அகசியா மரித்தான். அவனுக்கு மகன் இல்லாததால் யோராம் புதிய அரசனானான். இது அவன் தந்தை யோசபாத்தின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடந்தது.
18 அகசியா செய்த பிறச்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×