1 “உன் வாயிலே எக்காளத்தை வை.எச்சரிக்கை செய். கர்த்தருடைய வீட்டின் மேல் ஒரு கழுகைப் போன்றிரு. இஸ்ரவேலர்கள் எனது உடன்படிக்கையை உடைத்து விட்டார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை.
2 அவர்கள், ‘எங்கள் தேவனே, இஸ்ரவேலில் உள்ள நாங்கள் உம்மை அறிவோம்!’ என்று கூப்பிடுகின்றார்கள்.
3 ஆனால் இஸ்ரவேல் நன்மைகளை மறுத்தான். எனவே பகைவன் அவனைத் துரத்துகிறான்.
4 இஸ்ரவேலர்கள் அவர்களது அரசர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை. இஸ்ரவேலர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் நானறிந்த மனிதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இஸ்ரவேலர்கள் தமது வெள்ளியையும். பொன்னையும் பயன்படுத்தி தங்களுக்கு விக்கிரகங்கைளைச் செய்தார்கள். எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
5 (5-6) சமாரியாவே. கர்த்தர் உனது கன்றுகுட்டியை மறுத்துவிட்டார். தேவன் சொன்னார்: ‘நான் இஸ்ரவேலர்களுக்கு எதிராக மிகவும் கோபத்துடன் இருக்கிறேன்.’ இஸ்ரவேல் ஜனங்கள் தமது பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். யாரோ வேலைக்காரன் அச்சிலைகளைச் செய்தான். அவை தேவன் அல்ல. சமாரியாவின் கன்றுகுட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும்.
6 இஸ்ரவேலர்கள் காற்றில் விதை விதைக்க முயல்வதுபோன்ற ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தெல்லைகளை மட்டுமே பெறுவார்கள். அவர்கள் சூறைக் காற்றை அறுவடை செய்வார்கள். வயல்களில் பயிர்கள் வளரும். ஆனால் அது தானியத்தைக் கொடுக்காது. அதில் ஏதாவது தானியம் விளைந்தாலும் அந்நியர்கள் அதனைத் தின்றுவிடுவார்கள்.
7 “இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது. இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.
8 எப்பிராயீம் அவனுடைய ‘நேசர்களிடம்’ சென்றான். அவன் ஒரு காட்டுக்கழுதையைப் போன்று அசீரியாவில் அலைந்துத் திரிந்தான்.
9 இஸ்ரவேல் பல நாடுகளில் உள்ள தனது நேசர்களிடம் சென்றான். ஆனால் நான் இஸ்ரவேலர்களை ஒன்று சேர்ப்பேன். ஆனால் வல்லமையான அரசன் சுமத்தும் சுமைகளினால் அவர்கள் சிறிது துன்பப்பட வேண்டும்.
10 எப்பிராயீம் மேலும் மேலும் பலிபீடங்களைக் கட்டியது. அது பாவமானது. அப்பலிபீடங்கள் எப்பிராயீமின் பாவப் பலி பீடங்களாக இருந்திருக்கின்றன.
11 நான் எப்பிராயீமிற்காக 10,000 சட்டங்களை எழுதினாலும், அவன் அவற்றை யாரோ அந்நியர்களுக்குரியதாகவே கருதுவான்.
12 இஸ்ரவேலர்கள் பலிகளை விரும்புகின்றார்கள். அவர்கள் இறைச்சியைப் படைத்து உண்ணுகிறார்கள். கர்த்தர் அவர்களது பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களது பாவங்களை அவர் நினைவில் வைத்திருக்கிறார். அவர்களை அவர் தண்டிப்பார். அவர்கள் எகிப்திற்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
13 இஸ்ரவேல் அரசர்களின் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரவேல் அதனை உருவாக்கியவரை மறந்துவிட்டது. இப்போது யூதா கோவில்களைக் கட்டுகின்றது. ஆனால் நான் யூதவின் நகரங்களுக்கு நெருப்பை அனுப்புவேன். நெருப்பானது அதன் கோட்டைகளை அழிக்கும்!”