Bible Versions
Bible Books

Leviticus 24 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தர் மோசேயிடம்,
2 "இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. அந்த எண்ணெய் குத்து விளக்கிற்குரியது. அது அணையாமல் தொடர்ந்து எரியவேண்டும்.
3 ஆரோன் இந்த விளக்கை ஆசாரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதானத்தில் மாலைமுதல் காலைவரை அணையாமல் காக்கவேண்டும். இது திரைக்கு வெளியே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எரிய வேண்டும். இச்சட்டம் என்றென்றைக்கு முரியது.
4 ஆரோன் கர்த்தரின் சந்நிதியில் சுத்தமான தங்கத்தாலான விளக்குத்தண்டில் விளக்கைப் பொருத்தி எப்பொழுதும் எரியவிட வேண்டும்.
5 "அரைத்த மாவை எடுத்து அதில் பன்னிரெண்டு அப்பங்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு அப்பமும் பதினாறு கிண்ணங்கள் அளவு மாவால் செய்யப்பட வேண்டும்.
6 கர்த்தருக்கு முன்பாக தங்கத்தாலான மேஜையின்மேல் இரண்டு வரிசையாக அப்பங்களை அடுக்க வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்கள் இருக்கட்டும்.
7 ஒவ்வொரு வரிசைக்கும் சாம்பிராணிப் புகை காட்டு. அது அப்பத்தோடு இருந்து, கர்த்தருக்கு நினைவு அடையாளமாக, தகன பலியாக கர்த்தருக்கு ஏற்றதாக இருக்கும்.
8 அப்பத்தை இவ்வரிசையிலேயே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆரோன் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். இது எல்லாக் காலங்களுக்குமுரியது. இஸ்ரவேல் ஜனங்களோடு உள்ள இந்த உடன்படிக்கை என்னென்றும் தொடரும்.
9 இந்த அப்பங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். அவர்கள் பரிசுத்தமான இடங்களில் அவற்றை உண்ண வேண்டும்; ஏனென்றால் அவை கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுக்கப்பட்டவை. அது என்றென்றும் ஆரோனின் பங்காக இருக்கும்" என்று கூறினார்.
10 இஸ்ரவேல் பெண்ணுக்குப் பிறந்த ஒருவன் இருந்தான். அவனது தந்தை எகிப்தியன். இஸ்ரவேலியப் பெண்ணுக்கு பிறந்த அம்மகன் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு நடந்து கொண்டிருந்தான். அவன் முகாமில் இன்னொரு இஸ்ரவேலனோடு சண்டையிட்டான்.
11 அப்போது அவன் கர்த்தரின் நாமத்தைத் தூஷித்து, அவரைப் பற்றிக் கெடுதலாகப் பேசினான். எனவே அவனை மோசேயிடம் அழைத்து வந்தார்கள். (அவனது தாயின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.)
12 ஜனங்கள் அவனைச் சிறையில் வைத்துவிட்டு, அவனைப் பற்றிய தெளிவான பதிலைப் பெறும்படி கர்த்தரின் கட்டளைக்காகக் காத்திருந்தனர்.
13 கர்த்தர் மோசேயிடம்,
14 "முகாமுக்கு வெளியே ஒரு இடத்திற்கு அவனைக் கொண்டு வா. அவன் தூஷணம் பேசியதைக் காதால் கேட்ட எல்லோரையும் ஒன்றுகூட்டி அழைத்து வா. அவர்கள் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும், பிறகு ஜனங்கள் அவன் மீது கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
15 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டும்: எவனாவது தேவனை தூஷித்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
16 கர்த்தருக்கு எதிராக பேசுகிற எவனையும் எல்லோரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்று போடவேண்டும். அவன் அந் நியனாக இருந்தாலும் அவனும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே தண்டிக்கப்பட வேண்டும். கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிற எவனும் சாகடிக்கப்பட வேண்டும்.
17 "எவனாவது ஒரு கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை உண்டு.
18 ஒருவன் இன்னொருவனுக்குரிய மிருகத்தைக் கொன்றால் அதற்குப் பதிலாக இன்னொரு மிருகத்தைக் கொடுக்க வேண்டும்.
19 "எவனாவது இன்னொருவனைக் காயப்படுத்தினால் அவனுக்கும் அதைப் போன்ற காயத்தை உண்டாக்க வேண்டும்.
20 உடைந்த எலும்புக்கு எலும்பு உடைபட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அடுத்தவனுக்கு எவ்விதமான காயங்களை ஒருவன் உண்டாக்குகிறானோ, அதே விதமான காயங்களை அவன் அடைவான்.
21 எனவே ஒருவன் ஒரு மிருகத்தைக் கொன்றால் அவன் அதற்குரிய தொகையைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டால் அவன் மரண தண்டனையடைய வேண்டும்.
22 "இந்த சட்டம் நடுநிலையாக இருக்கும். இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் ஒரே நீதிதான். ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர்" என்று கூறினார்.
23 பிறகு மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். ஜனங்கள் தேவனைத் தூஷித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டு சென்று அங்கு அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×