Bible Versions
Bible Books

Revelation 5 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 சிம்மாசனத்தின் மேல் உட்கார்ந்திருப்பவரின் வலதுகைப் பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தோல் சுருளைக் கண்டேன். அதில் இருபக்கமும் எழுதப்பட்டிருந்தது. அது மூடி வைக்கப்பட்டு ஏழு முத் திரைகளும் இடப்பட்டிருந்தன.
2 ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்? என்று கேட்டான்.
3 ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ, பூமிக்கு அடியிலோ இருக்கிற எவரும் இதுவரை அம்முத்திரைகளை உடைத்து திறந்து உள்ளே பார்க்க இயலவில்லை.
4 எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன்.
5 ஆனால் முதியவர்களுள் ஒருவர் என்னிடம், அழாதே! யூதர் குலத்தில் பிறந்த சிங்கமான இயேசு வெற்றி பெற்றார். அவர் தாவீதின் வழி வந்தவர். அவர் ஏழு முத்திரைகளையும் உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவர்.
6 பிறகு ஒரு ஆட்டுக்குட்டி சிம்மாசனத்தின் மத்தியில் நிற்பதைக் கண்டேன். அதனைச் சுற்றி நான்கு ஜீவன்களும் இருந்தன. மூப்பர்களும் அதனைச் சுற்றி இருந்தனர். அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டது போல தோன்றியது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும். அவை உலகமெங்கும் அனுப்பப்பட்டவை.
7 அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது.
8 உடனே உயிர் வாழும் ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் அந்த ஆட்டுக் குட்டியைப் பணிந்து வணங்கினர். ஒவ்வொருவரிடமும் ஒரு இசைக்கருவி இருந்தது. அதோடு தூபவர்க்கத்தால் நிறைந்த பொற் கலசங்களையும் அவர்கள் பிடித்திருந்தனர். அத்தூபவர்க்கங்கள் நிறைந்த பொற்கலசங்கள் தேவனுடைய பரிசுத்தமான மக்களின் பிரார்த்தனைகளைக் குறிக்கின்றன.
9 அவர்கள் அந்த ஆட்டுக்குட்டிக்காகப் புதிய பாடலைப் பாடினர். தோல் சுருளை எடுக்க நீரே தகுதியுள்ளவர். அதன் முத்திரைகளையும் நீரே உடைக்கத்தக்கவர். ஏனென்றால் நீர் கொல்லப்பட்டவர் உம் குருதியால் தேவனுக்காக மக்களை மீட்டுக்கொண்டவர். அவர்கள் பல்வேறு இனத்தை, மொழியை, நாட்டை, குழுவைச் சேர்ந்தவர்கள்.
10 நீர் நம் தேவனுக்காக ஒரு இராஜ்யத்தையும், ஆசாரியர்களையும் உருவாக்கினீர். அவர்கள் இந்த உலகத்தை ஆளுவார்கள்.
11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது.
12 அந்தத் தூதர்கள் உரத்த குரலில் கீழ்க்கண்டவாறு பாடினார்கள். கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவரே வல்லமையை, செல்வத்தை, ஞானத்தை, பலத்தை, புகழை, மகிமையை, பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.
13 பிறகு பரலோகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும், பூமியிலும் கடலிலும் பூமிக்கு அடியிலுள்ள உலகிலுமுள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும் கீழ்க்கண்டவாறு சொல்வதைக் கேட்டேன். சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் பாராட்டுகளும், கனமும், புகழும், அதிகாரமும் சதாகலங்களிலும் உண்டாகட்டும்.
14 இதைக் கேட்டு அந்த நான்கு உயிருள்ள ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. மூப்பர்களும் பணிந்து வணங்கினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×