Bible Versions
Bible Books

:

1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிப்பதற்காக, தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான காரியம்.
2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் பார்த்த எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் நெருங்கிவிட்டது.
4 யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
6 நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
7 இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென்.
8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.
9 உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
10 கர்த்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்.
11 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது.
12 அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன்.
14 அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;
15 அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது.
16 தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
17 நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்;
18 மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.
19 நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது;
20 என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×