Bible Versions
Bible Books

5
:

1 நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள்.
2 தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக.
3 தொல்லையின் மிகுதியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் மிகுதியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.
5 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம்.
6 உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்?
7 அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
8 ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாக இருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
9 பூமியில் விளையும் பலன் எல்லோருக்கும் உரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.
10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
11 பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன?
12 வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது.
13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
14 அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை.
15 தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
16 அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன?
17 அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.
18 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
19 தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.
20 அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×