Bible Versions
Bible Books

7
:

1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும்.
3 இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
4 இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
5 லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள்.
6 ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான்.
7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை.
8 அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன்.
9 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால்,
10 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
11 அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன?
12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும்.
13 இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே.
14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே.
15 அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது.
16 அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல்,
17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார்.
18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது.
19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம்.
20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார்.
21 எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ,
22 அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
23 அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.
24 ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது.
25 மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.
26 பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார்.
28 நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×