Bible Versions
Bible Books

:

1 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் யெகோவாவால் உண்டான வார்த்தை:
2 நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களுடன் பேசி, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றில் அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக்கொடு என்றார்.
3 அப்பொழுது நான் அபசினியாவின் மகனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய மகன்கள் எல்லோரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
4 யெகோவாவுடைய ஆலயத்தில் பிரபுக்களுடைய அறையின் அருகிலும், வாசலைக்காக்கிற சல்லூமின் மகனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் மகனும் தேவனுடைய மனிதனுமாகிய ஆனான் என்பவனின் மகன்களுடைய அறையில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து,
5 திராட்சைரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய முன்னோர்களைச் சேர்ந்த மக்களின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சைரசம் குடியுங்கள் என்றேன்.
6 அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சைரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் மகனும் எங்களுடைய தகப்பனுமாகிய யோனதாப், நீங்கள் அந்நியர்களாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருப்பதற்கு,
7 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சைரசம் குடிக்காமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதைக்காமலும், திராட்சைத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களில் குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
8 அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் பெண்களும் எங்கள் மகன்களும் எங்கள் மகள்களும் திராட்சைரசம் குடிக்காமலும்,
9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் மகனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சைத்தோட்டமும் வயலும் விதைப்புமில்லை.
10 நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.
11 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய படைக்கும் சீரியருடைய படைக்கும் தப்பிக்க எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
12 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனிதரையும் எருசலேமின் மக்களையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்.
14 திராட்சைரசம் குடிக்காமல், ரேகாபின் மகனாகிய யோனதாப் தன் மகன்களுக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்வரை அதைக் குடிக்காமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
15 நீங்கள் அந்நிய தெய்வங்களை வணங்கி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும் போனீர்கள்.
16 இப்போதும், ரேகாபின் மகனாகிய யோனதாபின் மக்கள் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படியாமற் போனபடியினாலும்,
17 இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்திரவு கொடுக்காமலும் போனதினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிமக்கள் அனைவரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
18 பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
19 ஆகவே எல்லா நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத் தகுதியான மனிதன் ரேகாபின் மகனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×