Bible Versions
Bible Books

:

1 திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம்.
2 செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.
3 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
4 தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மகிமையும் ஜீவனும் ஆகும்.
5 மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.
6 பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.
7 செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
8 அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.
9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
11 சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்கு நண்பனாவான்.
12 யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
13 வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
15 பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
16 தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.
17 உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
18 அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, அது இன்பமாக இருக்கும்.
19 உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
20 சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும்,
21 ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
22 ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.
23 யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.
24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.
25 அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.
26 உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
27 செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
28 உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.
29 தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×