Bible Versions
Bible Books

:

1 யெகோவா மோசேயை நோக்கி:
2 “சபையைக் கூடிவரவழைப்பதற்கும் முகாம்களைப் புறப்படச்செய்வதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
3 அவைகளை ஊதும்போது, சபையார் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
4 ஒன்றைமட்டும் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களாகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
5 நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாக முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்.
6 அவைகளை நீங்கள் இரண்டாவது முறை பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்; அவர்களைப் புறப்படச்செய்வதற்கு பெருந்தொனியாக முழக்கவேண்டும்.
7 சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதினால் போதும் பெருந்தொனியாக முழக்கவேண்டாம்.
8 ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்.
9 உங்களுடைய தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற எதிரிக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போகும்போது, எக்காளங்களைப் பெருந்தொனியாக முழக்கவேண்டும்; அப்பொழுது உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சமூகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
10 உங்களுடைய மகிழ்ச்சியின் நாட்களிலும், உங்களுடைய பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது எக்காளங்களை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்களுடைய தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா” என்றார்.
11 இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.
12 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திரத்திலிருந்து தங்களுடைய பயண வரிசைகளின்படி புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று.
13 இப்படியே யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள்.
14 யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான்.
15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
16 செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.
17 அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் சந்ததியாரும் மெராரி சந்ததியாரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
18 அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்குச் சேதேயூரின் மகன் எலிசூர் தலைவனாக இருந்தான்.
19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.
20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான்.
21 கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள்.
22 அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைவனாக இருந்தான்.
23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்.
24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான்.
25 அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய முகாமின் கொடி எல்லா முகாம்களுக்கும் பின்னாக அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவனாக இருந்தான்.
26 ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.
27 நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான்.
28 இஸ்ரவேல் மக்கள் புறப்பட்டபோது, இந்த விதமாகத் தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே பயணம்செய்தார்கள்.
29 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய மகனான ஓபாவை நோக்கி: “உங்களுக்குத் தருவேன் என்று யெகோவா சொன்ன இடத்திற்கு நாங்கள் பயணமாகப் போகிறோம்; நீயும் எங்களோடு கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; யெகோவா இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்றான்.
30 அதற்கு அவன்: “நான் வரக்கூடாது; என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போகவேண்டும் என்றான்.
31 அப்பொழுது மோசே: “நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்திரத்திலே நாங்கள் முகாமிடும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
32 நீ எங்களோடு வந்தால், யெகோவா எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம்” என்றான்.
33 அவர்கள் யெகோவாவுடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது.
34 அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, யெகோவாவுடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
35 உடன்படிக்கைப் பெட்டியானது புறப்படும்போது, மோசே: “யெகோவாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக” என்பான்.
36 அது தங்கும்போது: “யெகோவாவே, அநேக ஆயிரம்பேர்களாகிய இஸ்ரவேலர்களிடத்தில் திரும்புவீராக” என்று சொல்லுவான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×