Bible Versions
Bible Books

:
-

1 யோசேப்பின் மகனுடைய வம்சத்தாரில் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர்கள் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேலின் முன்னோர்களுடைய பிதாக்களில் தலைவர்களாகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி:
2 “சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவா கட்டளையிட்டாரே; அன்றியும், எங்களுடைய சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் மகள்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்களுடைய ஆண்டவனுக்குக் யெகோவாவாலே கட்டளையிடப்பட்டதே.
3 இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் மக்களுடைய வேறொரு கோத்திரத்தின் ஆண்களுக்கு மனைவிகளானால், அந்த மகள்களுடைய சுதந்தரம் எங்கள் முற்பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்களுடைய சுதந்தரத்திற்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இல்லாமல் அற்றுப்போகுமே.
4 இஸ்ரவேல் மக்களுக்கு யூபிலி வருடம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடு சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே” என்றார்கள்.
5 அப்பொழுது மோசே யெகோவாவுடைய கட்டளையின்படி இஸ்ரவேல் மக்களை நோக்கி: “யோசேப்பு சந்ததியாரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
6 யெகோவா செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும்.
7 இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.
8 இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முற்பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் மகளும் தன்னுடைய முன்னோரின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
9 சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.
10 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி செலொப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள்.
11 செலொப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள் தங்களுடைய பிதாவின் சகோதரர்களுடைய சந்ததியாரை திருமணம் செய்தார்கள்; அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் வம்சத்தாரைத் திருமணம் செய்தபடியால்,
12 அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடு இருந்தது.
13 எரிகோவின் அருகே யோர்தான் நதிக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×