1 வறட்சிப் பற்றி எரேமியாவிற்கு வந்தகர்த்தருடைய வார்த்தை இது:
2 “யூதா நாடு மரித்துப்போன ஜனங்களுக்காக அழுகிறது. யூதா நகரங்களில் உள்ள ஜனங்கள், மேலும், மேலும், பலவீனர்களாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் தரையிலே கிடக்கிறார்கள். எருசலேமிலுள்ள ஜனங்கள் உதவிக்காக தேவனிடம் அழுகிறார்கள்.
3 ஜனங்களின் தலைவர்கள், வேலைக்காரர்களை நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினார்கள், வேலையாட்கள் நீர் தேக்கிவைத்திருக்கும் இடங்களுக்குச் சென்றனர். அங்கே எந்த தண்ணீரையும் கண்டுக்கொள்ளவில்லை. வேலைக்காரர்கள் காலி ஜாடிகளோடு திரும்பி வருவார்கள். எனவே அவர்கள், அவமானமும், சங்கடமும் அடைகின்றனர். அவர்கள் அவமானத்தால் தங்கள் தலையை மூடிக்கொள்ளுகின்றனர்.
4 எவரும் பயிர் செய்ய பூமியைத் தயார் செய்வதில்லை. தரையில் மழை ஏதும் விழவில்லை. விவசாயிகள் வெட்கப்படுகிறார்கள். எனவே, அவர்கள் வெட்கத்தால் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
5 நிலத்தில் இருக்கும் தாய் மான்கூட புதிதாகப் பிறந்த குட்டியை தனியாக விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே புல் இல்லாததால் அது அவ்வாறு செய்கிறது.
6 காட்டுக் கழுதைகள் மொட்டைப்பாறைகள் மீது நிற்கும். அவை ஓநாய்களைப்போன்று காற்றை உட்கொள்ளுகின்றன. ஆனால், அவற்றின் கண்கள் எந்த உணவையும் கண்டு கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அங்கே தின்ன எந்தச் செடிகளும் இல்லை.”
7 “அவற்றுக்கு எங்கள் குற்றங்களே காரணம் என்பது எங்களுக்குத் தெரியும்; நமது பாவங்களால் நாம் இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, உமது நாமத்தின் நன்மைக்காக எங்களுக்கு உதவ ஏதாவதுச் செய்யும். நாங்கள் உம்மை விட்டுப் பலமுறை போனோம். நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
8 தேவனே, நீரே இஸ்ரவேலின் நம்பிக்கை ஆவீர்! துன்பக் காலங்களில் இஸ்ரவேலர்களை நீர் காப்பாற்றுகிறீர். ஆனால், இப்போது நீர் இந்த நாட்டில் அந்நியனைப் போன்று இருக்கிறீர். ஒருநாள் இரவு மட்டும் தங்குகிற பயணியைப்போன்று நீர் இருக்கிறீர்.
9 ஆச்சரியத்தால் தாக்கப்பட்ட ஒரு மனிதனைப் போன்று நீர் தோன்றுகிறீர். எவரொருவரையும் காப்பாற்ற முடியாத, ஒரு போர் வீரனைப் போன்று நீர் காட்சி தருகிறீர். கர்த்தாவே! நீர் எங்களோடு இருக்கிறீர். நாங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படுகிறோம். எனவே உதவி இல்லாமல் எங்களை விட்டுவிடாதிரும்!”
10 யூதாவின் ஜனங்களைப்பற்றி கர்த்தர் சொன்னது இதுதான்: “யூதாவின் ஜனங்கள் உண்மையில் என்னை விட்டுவிலக விரும்பினார்கள். அந்த ஜனங்கள் என்னை விட்டு விலகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். இப்போது அவர்கள் செய்த தீயச் செயல்களை கர்த்தர் நினைப்பார். அவர்களது பாவங்களுக்காகக் கர்த்தர் அவர்களைத் தண்டிப்பார்.”
11 பிறகு கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களுக்கு நற்காரியங்கள் ஏற்படவேண்டும் என்று என்னிடம் ஜெபம் செய்யாதே.
12 யூதாவின் ஜனங்கள் உபவாசமிருந்து என்னிடம் ஜெபிக்கத் தொடங்குவார்கள். ஆனால், நான் அவர்களது ஜெபத்தைக் கேட்கமாட்டேன். அவர்கள் எனக்கு தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் கொடுத்தாலும் நான் அந்த ஜனங்களை ஏற்பதில்லை. நான் யூதாவின் ஜனங்களைப் போரில் அழிக்கப்போகிறேன். நான் அவர்களின் உணவை எடுத்துக்கொள்வேன். யூதாவின் ஜனங்கள் மரணம்வரை முழு பட்டினியாக இருப்பார்கள். நான் அவர்களைப் பயங்கரமான நோய்களால் அழிப்பேன்” என்றார்.
13 ஆனால் நான் கர்த்தரிடம் கூறினேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, தீர்க்கதரிசிகள் ஜனங்களிடம் சில வித்தியாசமானவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் யூதாவின் ஜனங்களிடம், ‘பகைவனின் வாளால் நீங்கள் துன்பப்படமாட்டீர்கள். நீங்கள் பசியாலும் துன்பப்படமாட்டீர்கள். இந்த நாட்டில் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பார்.’ ”
14 பிறகு, கர்த்தர் என்னிடம், “எரேமியா, அந்தத் தீர்க்கதரிசிகள் எனது நாமத்தால் பொய்களைப் பரப்புகிறார்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. நான் அவர்களுக்குக் கட்டளைக் கொடுக்கவோ அவர்களோடு பேசவோ இல்லை. அந்தத் தீர்க்கதரிசிகள், பொய்ச் சாட்சிகளையும், பயனற்ற மந்திரங்களையும், சொந்த ஆசைகளையும் பரப்பியிருக்கிறார்கள்.
15 எனவே, நான் இதைத்தான் என் நாமத்தால் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்களைப்பற்றிக் கூறுவது, அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. அந்தத் தீர்க்கதரிசிகள் சொன்னார்கள், ‘இந்த நாட்டைப் பகைவர்கள் எவரும் வாளால் தாக்கமாட்டார்கள், இந்த நாட்டில் எப்பொழுதும் பசி இருக்காது.’ அத்தீர்க்கதரிசிகள் பசியால் மரிப்பார்கள். பகைவரின் வாள் அவர்களைக் கொல்லும்.
16 அத்தீர்க்கதரிசிகள் பேசுகிற ஜனங்களும் வீதிகளில் எறியப்படுவார்கள். அந்த ஜனங்கள் பசியாலும், பகைவரின் வாளாலும் மரிப்பார்கள். அந்த ஜனங்களையும் அவர்களது மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும் புதைக்க எவரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்த தீமையைக்கொண்டே நான் அவர்களைத் தண்டிப்பேன்.
17 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் இச்செய்தியைக் கூறு, ‘எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன. நான் இரவும் பகவும் நிறுத்தாமல் அழுவேன். நான் எனது மகளான கன்னிக்காக *கன்னிமகள் எருசலேம். அழுவேன். நான் எனது ஜனங்களுக்காக அழுவேன். ஏனென்றால், யாரோ ஒருவர் அவர்களைத் தாக்குவர், அவர்களை நசுக்குவர், அவர்கள் மிக மோசமாகக் காயப்படுவார்கள்.
18 நான் நாட்டிற்குள் போனால் வாள்களால் கொல்லப்படுகிற ஜனங்களைக் காண்பேன். நான் நகரத்திற்குள் போனால், மிகுதியான நோயைப் பார்ப்பேன். ஏனென்றால், ஜனங்களுக்கு உணவு இல்லை, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் ஒரு அந்நியதேசத்திற்கு எடுத்துக்கொண்டு போகப்பட்டனர்’ ” என்றார்.
19 கர்த்தாவே, யூதா நாட்டை நீர் முழுமையாக ஒதுக்கிவிட்டீரா? கர்த்தரே நீர் சீயோனை வெறுக்கிறீரா? நாங்கள் மீண்டும் குணம் அடையமுடியாதபடி நீர் எங்களை பலமாகத் தாக்கியுள்ளீர். ஏன் அதனைச் செய்தீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. குணமாவதற்குரிய காலத்தை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பயங்கரமே வருகிறது.
20 கர்த்தாவே! நாங்கள் தீயவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எங்கள் முற்பிதாக்களும் தீமையைச் செய்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆம், உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம்.
21 கர்த்தாவே உமது நாமத்திற்கு நன்மைக்காக, எங்களை வெளியே தள்ளாதிரும். உமது மகிமையின் சிங்காசனத்திலிருந்து மேன்மையை விலக்காதிரும். எங்களோடு உள்ள உடன்படிக்கையை நினையும். அந்த உடன்படிக்கையை உடைக்க வேண்டாம்.
22 அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது. வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை. நீரே எங்களது ஒரே நம்பிக்கை, நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.