1 “எருசலேம் தெருக்களில் நடவுங்கள். சுற்றிப் பார்த்து இவற்றைப்பற்றி எண்ணுங்கள். நகரத்தின் பொது சதுக்கங்களைத் தேடுங்கள். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் பாருங்கள். அவன் நேர்மையான காரியங்களைச் செய்கிறவனாகவும் உண்மையைத் தேடுகிறவனாகவும் இருக்கவேண்டும். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் நான் எருசலேமை மன்னிப்பேன்!
2 ஜனங்கள் வாக்குறுதிச் செய்து ‘ஜீவனுள்ள கர்த்தரைக் கொண்டுசொல்லுகிறோம்’ என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவர்களிடம் இல்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 கர்த்தாவே! உமது ஜனங்கள் உமக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று நீர் விரும்புவதை நான் அறிகிறேன். நீர் யூதா ஜனங்களைத் தாக்குகிறீர். ஆனால், அவர்கள் எவ்வித வலியையும் உணர்ந்துக்கொள்வதில்லை. அவர்களை நீர் அழித்தீர். ஆனால் அவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் பிடிவாதமாகிவிட்டனர். அவர்கள் தாம் செய்த கெட்ட செயல்களுக்கு, வருத்தப்பட மறுத்தனர்.
4 ஆனால் நான் (எரேமியா) எனக்குள் சொன்னேன். “ஏழைகள் மட்டுமே முட்டாளாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வழியை ஏழை ஜனங்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை. ஏழை ஜனங்கள் அவர்களது தேவனுடைய போதனைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
5 ஆகவே நான் யூதாவின் தலைவர்களிடம் போவேன். நான் அவர்களோடு பேசுவேன். அந்தத் தலைவர்களுக்கு நிச்சயமாக கர்த்தருடைய வழி தெரியும். அவர்களுக்கு தமது தேவனுடைய சட்டங்கள் தெரியும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” ஆனால், அந்தத் தலைவர்கள், அனைவரும் கர்த்தருக்கு சேவைசெய்வதிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
6 அவர்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். எனவே காட்டிலிருந்து ஒரு சிங்கம் வந்து அவர்களைத் தாக்கும். வனாந்தரத்திலிருந்து ஒரு நரி வந்து அவர்களைக் கொல்லும். அவர்களின் நகரங்களுக்கு அருகில், சிறுத்தை ஒளிந்துக்கொண்டிருக்கிறது. நகரத்திலிருந்து வெளியே வரும் எவரையும் அந்த சிறுத்தை துண்டுத் துண்டாகக் கிழித்துப்போடும். இது நிகழும் ஏனென்றால், யூதா ஜனங்கள் மீண்டும், மீண்டும், பாவம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பலமுறை கர்த்தரிடமிருந்து விலகி, அலைந்திருக்கிறார்கள்.
7 “யூதாவே! உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்? என்று ஒரு நல்ல காரணத்தை எனக்குக் கொடு, உனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள். அவர்கள் விக்கிரகங்களுக்கு, வாக்குறுதி செய்தனர். அந்த விக்கிரகங்கள் உண்மையில் தெய்வங்கள் அல்ல! நான் உனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் வேசிகளோடு மிகுதியான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.
8 அவர்கள் குதிரைகளைப்போன்று இருக்கிறார்கள். அவர்கள் மிகுதியாக உணவு உண்கின்றனர். துணையோடு உறவுகொள்ள தயாராகின்றனர். அவர்கள் அயலானின் மனைவியை இச்சையோடு அழைக்கிற குதிரைகளைப்போன்று, இருக்கிறார்கள்.
9 இவற்றைச் செய்வதற்காக யூதா ஜனங்களை நான் தண்டிக்கவேண்டாமா?” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஆம்! இதுபோல வாழ்கிற ஒரு நாட்டை நான் தண்டிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுப்பேன்.
10 “யூதாவின் திராட்சைத் தோட்ட வரிசைகளுக்குச் செல்லுங்கள், கொடிகளை வெட்டிப் போடுங்கள், (ஆனால் முழுவதுமாக அவற்றை அழிக்காதீர்கள்) அவற்றின் கிளைகளையெல்லாம் வெட்டுங்கள். ஏனென்றால், இந்தக் கிளைகள் கர்த்தருக்கு உரிமை உடையவை அல்ல.
11 ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும் எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “அந்த ஜனங்கள் கர்த்தரைப்பற்றி பொய்யுரைத்திருக்கின்றனர். அவர்கள், ‘கர்த்தர் எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார். தீமை எதுவும் நமக்கு ஏற்படாது. ஒரு படை நம்மைத் தாக்குவதை நாம் எப்பொழுதும் காண்பதில்லை. நாம் எப்பொழுதும் பட்டினியாக இருப்பதில்லை.’
13 கள்ளத்தீர்க்கதரிசிகள் வெறுமையான காற்றைப் போன்றவர்கள். தேவனுடைய வார்த்தை அவர்களில் இல்லை. அவர்களுக்குத் தீயவை ஏற்படும்.”
14 அந்த ஜனங்கள், “நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன் என்று கூறினார்கள். ஆகையால் எரேமியாவே, நான் உனக்குக் கொடுத்த வார்த்தைகள் நெருப்பைப் போன்றிருக்கும். அந்த ஜனங்கள் மரத்துண்டுகளைப் போன்றிருப்பார்கள். அந்த நெருப்பு அவர்களை முழுமையாக எரித்துப் போடும்!” என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
15 இஸ்ரவேல் குடும்பத்தாரே! “நான் உங்களைத் தாக்குவதற்காகத், தொலை தூரத்திலிருந்து, விரைவில் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன். அது ஒரு வல்லமை மிக்க ஜனமாக இருக்கிறது. இது பழமையான தேசமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் ஜனங்கள் நீங்கள் அறியாத ஒரு மொழியைப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.
16 அவர்களின் அம்புப் பைகள் திறந்த சவக்குழிகளைப் போன்றிருக்கும். அவர்களது ஆண்கள் எல்லாம் வலிமையான வீரர்களாக இருக்கிறார்கள்.
17 நீங்கள் சேகரித்து வைத்த விளைச்சலை எல்லாம் அந்தப் படைவீரர்கள் உண்பார்கள். உங்கள் உணவு முழுவதையும் அவர்கள் உண்பார்கள். அவர்கள் உங்களது மகன்களையும் மகள்களையும் உண்பார்கள் (அழிப்பார்கள்). அவர்கள் உங்கள் ஆடுகளையும் உங்கள் மாடுகளையும் உண்பார்கள். அவர்கள் உங்கள் திராட்சைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் உண்பார்கள். அவர்கள் தமது வாள்களால் உங்களது பலமான நகரங்களை அழிப்பார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்த உங்களது பலமான நகரங்களை அவர்கள் அழிப்பார்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’ ” என்று சொல்.
20 கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும், யூதா நாட்டினரையும் நோக்கி:
21 நீங்கள் மதிகேடர்கள், உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை! உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!
22 நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்”என சொல் என்றார். “எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும். கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே. இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன். கரையை அலைகள் தாக்கலாம். ஆனால் அவை அதனை அழிக்க முடியாது. அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம். ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.
23 மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.
24 யூதாவின் ஜனங்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ‘எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுவோம், மரியாதை செய்வோம். நமக்கு அவர் சரியான காலங்களில் மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுக்கிறார். நாம் சரியான காலத்தில் அறுவடையைப் பெறுவோம்’ என்று அவர் உறுதி செய்கிறார்.
25 யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். எனவே மழையும் அறுவடையும் வரவில்லை. கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
26 என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர். அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள். இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள். ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
27 கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று, இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும். அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
28 அவர்கள் தாம் செய்த தீமைகளால் பெரிதாக வளர்ந்து கொழுத்துப்போயிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தீமைகளுக்கு முடிவே இல்லை. பெற்றோர்கள் இல்லாதிருக்கிற பிள்ளைகளின் வழக்கில் பரிந்து பேசுவதில்லை. அந்த அனாதைகளுக்கு அவர்கள் உதவுவதில்லை. ஏழை ஜனங்கள் நியாயமான தீர்ப்புப்பெற விடுவதில்லை.
29 இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?” என்று கர்த்தர் சொல்லுகிறார். “இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”
30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.
31 தீர்க்கதரிசிகள், பொய்களைக் கூறுகிறார்கள். ஆசாரியர்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை. என்னுடைய ஜனங்கள் இந்நிலையை விரும்புகிறார்கள்! ஆனால், உங்கள் தண்டனை வரும்போது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார்.