Bible Versions
Bible Books

:

1 “ஒருவன் அவனது மனைவியை விவாகரத்து செய்கிறான். அவள் அவனை விட்டு விலகுகிறாள். அவள் இன்னொருவனை மணந்துகொள்கிறாள். அவனால் அவனது மனைவியிடம் மீண்டும் வர முடியுமா? இல்லை! அவன் அந்தப் பெண்ணிடம் மீண்டும் போனால் பிறகு அந்நாடு ‘அழுக்காகி’ விடும். யூதாவே, பல நேசரோடே (பொய்த் தெய்வங்களோடு) நீ ஒரு வேசியைப்போன்று நடந்தாய். இப்போது நீ என்னிடம் திரும்பி வா!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 “யூதாவே, மலை உச்சிமீது கண்களை ஏறெடுத்துப் பார். உன் நேசர்களோடு (பொய்த் தெய்வங்கள்) பாலின உறவுகொள்ளாத இடம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அரபியன் பாலைவனத்தில் காத்திருப்பதுபோன்று நீ சாலை ஓரத்தில், உன் நேசர்களுக்காகக் காத்திருந்தாய். நீ இந்த நாட்டை ‘அசுத்தம்’ பண்ணிவிட்டாய்! இது எப்படி? நீ பல தீயச் செயல்களைச் செய்தாய். எனக்கு விசுவாசமற்றவளாக இருந்தாய்.
3 நீ பாவம் செய்தாய். எனவே மழை பெய்யவில்லை. மழைகாலத்திலும் மழை பெய்யவில்லை. ஆனால் இன்னும் நீ வெட்கப்பட மறுக்கிறாய். ஒரு வேசி வெட்கப்பட மறுக்கும்போது அவளின் முகம்போன்று, உன் முகத்தின் தோற்றம் இருக்கிறது. நீ செய்தவற்றுக்காக, வெட்கப்பட மறுக்கிறாய்.
4 ஆனால் இப்போது என்னை நீ ‘தந்தையே’ என்றழைக்கிறாய். ‘நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நீர் எனது நண்பனாக இருந்தீர்’ என்று கூறுகிறாய்.
5 ‘தேவன் எப்பொழுதும் என்மீது கோபங்கொள்வதில்லை. தேவனுடைய கோபம் எப்பொழுதும் தொடராது’ என்றும் கூறுகிறாய். “யூதாவே, நீ அவற்றைக் கூறுகிறாய். ஆனால் நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீமையைச் செய்கிறாய்.” இரண்டு தீய சகோதரிகள்: இஸ்ரவேல் மற்றும் யூதா
6 யோசியா அரசன் யூதா நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில், கர்த்தர் என்னோடு பேசினார். அவர், “எரேமியா, இஸ்ரவேல் செய்த தீமைகளை நீ பார்த்தாய். எவ்வாறு அவள் எனக்கு விசுவாசமில்லாமல் நடந்துகொண்டாள், என்பதை நீ அறிவாய். ஒவ்வொரு மலை உச்சியின் மேலும் பச்சை மரங்களின் கீழும், விக்கிரகங்களோடும், சோரம் போய் அவள் பாவம் செய்தாள்.
7 நான் எனக்குள்ளே, ‘இஸ்ரவேல் தீயவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, என்னிடம் திரும்பி வருவாள்’ என்றேன், ஆனால் அவள் என்னிடம் திரும்பி வரவில்லை. இஸ்ரவேலின் விசுவாசமில்லாத சகோதரியான யூதா, அவள் என்ன செய்தாள் என்று பார்த்தாள்.
8 இஸ்ரவேல் விசுவாசம் இல்லாமல் போனது. நான் ஏன் அவளை அனுப்பினேன், என்று இஸ்ரவேல் அறிந்தது. யூதா சோரமாகிய பாவத்தைச் செய்ததால், நான் அவளை விவாகரத்து செய்துவிட்டேன் என்று இஸ்ரவேல் அறிந்துகொண்டது. ஆனால் அது அவளது விசுவாசமற்ற சகோதரியைப் பயப்படுத்தவில்லை. யூதா பயப்படவில்லை. யூதா வெளியே போய், வேசியைப்போன்று நடித்தாள்.
9 யூதா கவலைப்படாமல், அவள் வேசியைப் போன்று நடித்துக்கொண்டிருந்தாள். எனவே அவள் தன் நாட்டை ‘அசுத்தம்’ ஆக்கிவிட்டாள். கல்லாலும் மரத்தாலும் ஆன விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதின் மூலம் அவள் சோரமாகிய பாவத்தைச் செய்தாள்.
10 இஸ்ரவேலின் விசுவாச மற்ற சகோதரி (யூதா) என்னிடம் முழுமனதோடு திரும்பி வரவில்லை. அவள் என்னிடம் திரும்பி வந்ததாக நடித்தாள்” என்று சொல்லுகிறார்.
11 கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, “இஸ்ரவேல் என்னிடம் விசுவாசமாக இருக்கவில்லை. ஆனால் விசுவாசமற்ற யூதாவைவிட அவளுக்கு சிறந்த காரணங்கள் இருந்தன.
12 எரேமியா, வடக்குத் திசையைப் பார்த்து இச்செய்தியைக் கூறு: “ ‘விசுவாசமற்ற இஸ்ரவேல் ஜனங்களே திரும்பி வாருங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நான் உங்கள் மேலுள்ள கோபத்தைக் காட்டுவதில்லை. நான் இரக்கம் உள்ளவர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நான் என்றென்றும் உங்கள்மேல் கோபங்கொள்ளமாட்டேன்.
13 ஆனால் நீ இதுவரை செய்த உன் பாவத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருக்கு எதிராகத் திரும்பினாய், அதுவே உன் பாவம், மற்ற நாடுகளிலிருந்து வந்த ஜனங்களின் விக்கிரகங்களை நீ தொழுதுகொண்டாய். ஒவ்வொரு பச்சையான மரத்தின் அடியிலும் உள்ள விக்கிரகங்களைத் தொழுதுகொண்டாய். நீ எனக்கு அடிபணியவில்லை’ ” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 “ஜனங்களாகிய நீங்கள் விசுவாசமற்றவர்கள். ஆனால் என்னிடம் திரும்பி வாருங்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உனது ஆண்டவர். நான் ஒவ்வொரு நகரத்திலிருந்து ஒருவனையும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்து இரண்டுபேரையும் எடுத்து சீயோனுக்குக் கொண்டுவருவேன்.
15 பிறகு நான் உங்களுக்குப் புதிய அரசர்களைத் தருவேன். அந்த அரசர்கள் எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள்.
16 அந்த நாட்களில், இந்த நாட்டில் நீங்களே மிகுதியாக இருப்பீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நேரத்தில் ஜனங்கள், “நான் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி எங்களோடு இருந்ததை நினைக்கிறேன், என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இன்னொரு முறை பரிசுத்த பெட்டியை நினைவுகூரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் பரிசுத்த பெட்டியைச் செப்பனிடுவதுமில்லை.
17 அந்நேரத்தில், எருசலேம் நகரம் ‘கர்த்தருடைய சிங்காசனம்’ என்று அழைக்கப்படும். எல்லா நாடுகளும் எருசலேம் நகரத்தில் சேர்ந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமைதரக் கூடுவார்கள். அவர்கள் இனிமேல் தங்களது பொல்லாங்கான கடின இதயம் சொல்வதுபோன்று நடக்கமாட்டார்கள்.
18 அந்த நாட்களில், யூதாவின் குடும்பம், இஸ்ரவேல் குடும்பத்தோடு சேரும். அவர்கள் வடக்கு நாட்டிலிருந்து வந்து கூடுவார்கள். நான் அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் வருவார்கள்.
19 “கர்த்தராகிய நான் எனக்குள்ளே கூறினேன், “நான் உங்களை எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்று நடத்த விரும்புகிறேன். நான் உங்களுக்கு ஒரு சுதந்தரமான நாட்டைக் கொடுக்க விரும்புகிறேன். மற்ற நாடுகளைவிட இனிமையான நாட்டைத் தர விரும்புகிறேன், நீ என்னை ‘தந்தையே’ என்று அழைப்பாய் என எண்ணினேன். நீ என்னை எப்பொழுதும் பின்பற்றுவாய் என எண்ணினேன்.
20 ஆனால் நீ, தன் கணவனுக்கு, நம்பிக்கையற்ற ஒரு பெண்ணைப்போன்று இருக்கிறாய். இஸ்ரவேல் குடும்பமே நீ என்மீது விசுவாசம் இல்லாமல் இருக்கிறாய்!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 நீ மலைகளின் மேல் அழுகையைக் கேட்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் இரக்கத்திற்காக அழுதுகொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கெட்டவர்களானார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தனர்.
22 கர்த்தர் மேலும் இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் என்மீது விசுவாசம் இல்லாமல் உள்ளீர்கள். ஆனால், என்னிடம் திரும்பி வாருங்கள்! என்னிடம் விசுவாசம் இல்லாமல் போனதற்கு நான் உங்களை மன்னிப்பேன். திரும்பி வாருங்கள்.” அதற்கு ஜனங்கள், “ஆம், நாங்கள் உம்மிடம் வருவோம். நீரே எங்களது தேவனாகிய கர்த்தர்.
23 மலையின் மேலுள்ள விக்கிரகங்களைத் தொழுதுகொள்வது, முட்டாள்தனம். மலையின் மேல் கேட்கும் விருந்து கேளிக்கைகளின் பேரொலிகள் எல்லாம் தவறானவை. நிச்சயமாக இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவது நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்தே வருகிறது.
24 அந்தப் பயங்கரமான பாகால் என்னும் பொய்த் தெய்வம், எங்கள் தந்தைக்கு சொந்தமானவற்றைத் தின்றது. நாங்கள் சிறுவர்களாக இருந்தது முதல் இது நடக்கிறது. அந்தப் பயங்கரமான பொய்த் தெய்வங்கள் எங்கள் தந்தைகளின் ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும், எடுத்துக்கொண்டது.
25 எங்களது வெட்கத்தில் நாங்கள் படுத்துக்கிடப்போம், எங்களது அவமானத்தை ஒரு போர்வையைப்போல் மூடிக்கொள்ள விடுங்கள். எங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறோம். நாங்களும், எங்கள் தந்தைகளும், பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் சிறுவர்களாக இருந்த நாள் முதலாய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை” என்று சொல்ல வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×