Bible Versions
Bible Books

:

1 இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
2 வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6 அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7 அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8 சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான்.
9 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே.
10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11 அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான்.
13 புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
17 எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
18 அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
19 அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22 அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,
23 பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி;
24 அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32 அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.
33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36 அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்.
37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,
38 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
40 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
41 அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,
42 “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.
43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44 உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.
45 பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
46 “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
47 அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48 மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×