Bible Versions
Bible Books

Luke 19 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அவர் யெரிக்கோவுக்கு வந்து அதனூடே போய்க்கொண்டிருந்தார்.
2 அங்கே சக்கேயு என்னும் ஒருவன் இருந்தான். அவன் தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன்.
3 இயேசு யாரென்று பார்க்க வழிதேடினான். கூட்டமாயிருந்ததாலும், அவன் குள்ளானயிருந்ததாலும் அவரைப் பார்க்கமுடியவில்லை.
4 அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், அவர் அவ்வழியே வரவிருந்தார்.
5 இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.
6 அவன் விரைவாய் இறங்கி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.
7 இதைக் கண்ட அனைவரும், "பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தனர்.
8 ஆனால் சக்கேயு எழுந்து, "ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.
9 அதற்கு இயேசு, " இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.
10 இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.
11 மக்கள் இதைக் கேட்டுக்கொண்டிருக்கையில் அவர் யெருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், கடவுளின் அரசு உடனே வெளிப்படும் என்று அவர்கள் எண்ணியதாலும்,
12 அவர் தொடர்ந்து ஓர் உவமை சொன்னார்: "பெருங்குடி மகன் ஒருவன் அரசபதவி பெற்றுதரத் தொலைநாட்டிற்குப் புறப்பட்டான்.
13 தன் ஊழியர் பத்துப்பேரை அழைத்து பத்துப் பொற்காசுகளை அவர்களுக்குக் கொடுத்து, 'நான் வரும்வரை வாணிகம் செய்யுங்கள்' என்றான்.
14 அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்தனர். ஆகையால், 'இவனை எங்கள் அரசனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று சொல்லும்படி அவனுக்குப்பின் தூதுவிடுத்தனர்.
15 "அரச பதவி பெற்றுத் திரும்பி வந்தபின், பணம் வாங்கிய ஒவ்வொருவனும் சம்பாதித்தது எவ்வளவு என்று அறிய அவ்வூழியரைத் தன்னிடம் அழைத்துவரச் சொன்னான்.
16 முதல் ஊழியன் வந்து, 'அரசே, உமது பொற்காசு பத்துப் பொற்காசுகளைச் சம்பாதித்துள்ளது' என்றான்.
17 அவனோ, ' நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தால், பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரு' என்றான்.
18 வேறொருவன் வந்து, 'அரசே, உமது பொற்காசு ஐந்து பொற்காசுகளை ஆக்கியுள்ளது' என்றான்.
19 அவனிடமும் அரசன், 'நீ ஐந்து நகர்களுக்குத் தலைவனாய் இரு' என்றான்.
20 இன்னொருவன் வந்து, 'அரசே, இதோ! உமது பொற்காசு. உமக்கு அஞ்சி இதை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்தேன்.
21 ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர்; வைக்காததை எடுப்பவர், விதைக்காததை அறுப்பவர்' என்றான்.
22 அரசன் அவனைப் பார்த்து, 'கெட்ட ஊழியனே உன்வாய்ச் சொல்லைக்கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்புள்ளவன், வைக்காததை எடுப்பவன், விதைக்காததை அறுப்பவன் என்பதை அறிந்தும்,
23 நீ ஏன் என் பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்துவைக்கவில்லை? நான் வந்து வட்டியோடு திரும்பப்பெற்றிருப்பேனே' என்றான்.
24 பின், சூழநின்றவர்களை நோக்கி, 'இவனிடமிருந்து பொற்காசைப் பிடுங்கி, பத்துப் பொற்காசுகள் உடையவனுக்குக் கொடுங்கள்' என்றான்.
25 அதற்கு அவர்கள், 'அரசே, அவனிடம் பத்துப் பொற்காசுகள் உள்ளனவே! ' என்றார்கள்.
26 அரசனோ, 'உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 "அன்றியும் என்னைத் தங்கள் அரசனாக ஏற்க விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டுவந்து, என்முன் வெட்டி வீழ்த்துங்கள்' என்றான்."
28 இதெல்லாம் சொன்ன பின்பு, அவர் யெருசலேமை நோக்கி அவர்களுக்கு முன்னால் நடந்துபோனார்.
29 அவர் ஒலிவத்தோப்புமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபோது, சீடருள் இருவரை அழைத்து,
30 "எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழையும்போது இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், அவரிடம், 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.
32 அனுப்பப்பட்டவர்கள் சென்று, அவர் சொன்னபடியே கண்டனர்.
33 அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்த்தபொழுது அதற்கு உரியவர்கள், 'கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்க,
34 " இது ஆண்டவருக்குத் தேவை என்றனர்.
35 அக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏறச் செய்தனர்.
36 அவர் செல்லும்போது வழியில் தங்கள் போர்வைகளை விரித்தனர்.
37 அவர் ஒலிவமலைச் சாரலை நெருங்கியதும், சீடர் கூட்டமெல்லாம் தாங்கள் கண்ட புதுமைகள் அனைத்தையும்பற்றி மகிழ்ச்சியோடு, உரத்த குரலில்,
38 'ஆண்டவர் பெயரால் அரசராக வருகிறவர் வாழி! வானகத்தில் அமைதியும் உன்னதங்களில் மகிமையும் உண்டாகுக!' என்று கடவுளைப் புகழத் தொடங்கியது.
39 கூட்டத்திலிருந்த பரிசேயர் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்" என்றனர்.
40 அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால், கற்களே கூவும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
41 அவர் நகரை நெருங்கியபோது அதைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டுப் புலம்பியதாவது:
42 "சமாதானத்திற்கான வழியை நீயும் இந்நாளில் அறிந்திருக்கலாகாதா? இப்பொழுதோ, அது உன் கண்ணுக்கு மறைந்துள்ளது.
43 ஒருநாள் வரும், அன்று உன் பகைவர் உன்னைச் சுற்றிலும் அரண் எழுப்பி உன்னைச் சூழ்ந்துகொண்டு எப்பக்கத்திலிருந்தும் நெருக்கி,
44 உன்னைனயும் உன்னிடமுள்ள உன் மக்களையும் நொறுக்கித் தரைமட்டமாக்கி, உன்னிடம் கல்லின்மேல் கல் இராதபடி செய்வார்கள். -- ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறியவில்லை." வியாபாரிகளை விரட்டுதல்
45 பின்பு அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களைத் துரத்தத் தொடங்கி,
46 அவர்களை நோக்கி, "'என் வீடு செபவீடாகும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
47 அவர் நாடோறும் கோயிலில் போதித்து வந்தார். தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மக்களுள் பெரியோர்களும் அவரைத் தொலைக்கப்பார்த்தனர்.
48 ஆனால் எப்படித் தொலைப்பதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், மக்கள் எல்லாரும் அவர்சொல்வதைக் கேட்டு அவர்வசப்பட்டிருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×