Bible Versions
Bible Books

Judges 8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அப்போது எபிராயிமியர் அவனை நோக்கி, "மதியானியரை எதிர்த்துப் போர் புரியச் சென்ற பொழுது நீர் எம்மை அழைக்காமல் போனதன் காரணம் யாது?" என்று வன்மையுடன் முறையிட்டுக் கடுமையாகக் கடிந்து கொண்டனர்.
2 அதற்கு அவன், "நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ? அபிசேயிரின் திராட்சை இரசத்தை விட எபிராயிமின் திராட்சை இரசம் மேலானது அன்றோ?
3 ஆண்டவர் உங்கள் கையில் மதியானியத் தலைவரான ஒரேபையும் சேபையும் ஒப்படைத்தார். நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ?" என்றான். அதை அவன் சொன்ன போது அவன் மேல் அவர்கள் கொண்டிருந்த ஆத்திரம் அடங்கிற்று.
4 பிறகு கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தனர். ஆனால் அவர்கள் களைப்பாய் இருந்ததால் ஓடிவனர்களைத் துரத்த முடியாது போயிற்று.
5 அப்போது கெதெயோன் சொக்கோத்தூதரை நோக்கி, "என்னோடு இருப்போர் களைப்பாய் இருப்பதால் அவர்களுக்கு நீங்கள் அப்பம் கொடுங்கள். அப்படியானால் நாங்கள் மதியானிய அரசர்களான செபேயையும் சால்மனாவையும் தொடர முடியும்" என்றான்.
6 அதற்குச் சொக்கோத்தின் தலைவர்கள், "உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்க, சேபே, சால்மனா என்போரின் கைகள் ஏற்கனவே உன் கைவயமாயிற்றே இதைப் பற்றியோ உன் படைக்கு அப்பம் தரவேண்டுமென்று கேட்கிறாய்?" என்றார்கள்.
7 அதற்கு அவன், "சேபேயையும் சால்மனாவையும் ஆண்டவர் என் கையில் அளிக்கும்போது உங்கள் உடலைப் பாலைவனத்தின் முட்களாலும் நெரிஞ்சிகளாலும் கிழித்து விடுவேன்" என்றான்.
8 அவன் அங்கிருந்து பானவேலுக்கு வந்து அவ்வூராரிடமும் அவ்வாறே கேட்டான். அவர்களும் செக்கோத்தார் கூறியபடியே பதிலளித்தனர்.
9 எனவே அவன் அவர்களையும் நேக்கி, "வெற்றி வீரனாய் நான் சமாதானத்துடன் திரும்பி வருகையில் இக்கோபுரத்தை இடித்துப் போடுவேன்" என்றான்.
10 சேபேயும் சால்மனாவும் தம் சேனைகளோடு இளைப்பாறினார்கள். கிழக்குப்புறத்தில் கூடியிருந்த எல்லா மக்கட் திரளிலும் ஓர் இலட்சத்திருபதினாயிரம் வீரர் மடிய, பதினையாயிரம் பேர் மட்டும் மீதியிருந்தனர்.
11 கெதெயோன், கூடாரங்களில் வாழ்வோர் இருந்த இடம்வழியாக நோபே, சேக்பாவுக்குக் கிழக்கே சென்று, பாதுகாப்புடன் இருப்பதாகவும், யாதொரு தீங்கும் நேரிடாது என்றும் எண்ணியிருந்த எதிரிகளின் பாளையத்தை முறியடித்தான்.
12 சேபேயும் சால்மனாவும் ஓடிப்போயினர். கெதெயோன் பின்தொடர்ந்து அவர்களைப் பிடித்து அவர்கள் சேனைகளைக் கலங்கடித்தான்.
13 சூரியன் உதிக்குமுன் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்போது,
14 கெதெயோன் செக்கோத்தாரின் இளைஞன் ஒருவனைப் பிடித்து மக்கட் தலைவர்கள், மூப்பர்களின் பெயர்களைக் கேட்டு, அவர்களில் எழுபத்தேழு பேர்ளைக் குறித்துக் கொண்டான்.
15 கெதெயோன் செக்கோத் ஊராரிடம் வந்து, "இதோ! 'களைப்புற்ற உன் மனிதருக்கு நாங்கள் அப்பம் கொடுப்பதற்குச் சேபே, சால்மனாவின் கைகள் உன் கைவயமாயிற்றோ?' என்று என்னைக் கேலி செய்தீர்களே: இதோ! சேபேயும் சால்மனாவும்" என்றான்.
16 பிறகு அவன் நகர் மூப்பரைப் பிடித்துப் பாலைவன முட்களையும் நெரிஞ்சிகளையும் கொணர்ந்து செக்கோத்தின் மனிதரை அவற்றால் குத்திக் கிழித்தான்.
17 பின்பு அவன் பானுவேலின் கோபுரத்தையும் இடித்து அந்நகர் மக்களையும் கொன்றான்.
18 பிறகு அவன் சேபேயையும் சால்மனாவையும் நோக்கி, "தாபோரில் நீங்கள் கொன்ற மனிதர் எப்படிப் பட்டவர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "உன்னைப் போன்றவர்களே; அவர்களில் ஒருவன் இளவரசன்" என்றனர்.
19 அதற்கு அவன் "அவர்கள் என் சகோதரர், என் தாயின் மக்கள். உண்மையாகவே, நீங்கள் அவர்களைக் கொன்றிராவிட்டால், நானும் உங்களைக் கொல்லாது விட்டுவைப்பேன்" என்று கூறினான்.
20 தன் மூத்த மகன் ஜேத்தேரை நோக்கி, "நீ எழுந்து அவர்களைக் கொல்" என்றான். அவனோ வாளை உருவவில்லை; சிறு பிள்ளையாய் இருந்ததால் அஞ்சினான்.
21 அப்போது சேபேயும் சால்மனாவும், "நீயே எழுந்து எம்மேல் விழுந்து கொல்; மனிதனுக்கு, வயதுக்கு ஏற்ப வலிமை சேபேயையும் சால்மனாவையும் வெட்டி, அரச ஒட்டகங்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த குளிசங்களையும் சுரப்பளிகளையும் எடுத்துக் கொண்டான்.
22 அப்போது இஸ்ராயேலர் எல்லாரும் கெதெயோனை நோக்கி, "நீரே எங்கள் தலைவர். நீரும் உம் மகனும், உம் மகனின் மகனும் எம்மை ஆளுங்கள். ஏனெனில், மதியானியர் கைகளினின்று நீரே எம்மை மீட்டீர்" என்றனர்.
23 அதற்கு அவன், "நான் உங்களை ஆள மாட்டேன்; ஆனால் ஆண்டவரே உங்களை ஆளட்டும்" என்றான்.
24 மேலும், அவர்களை நோக்கி, "உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; நீங்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களை எனக்குக் கொடுங்கள்" என்றான். ஏனெனில் இஸ்ராயேலரிடம் பொற்கடுக்கன் அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது.
25 அப்போது அவர்கள், "மகிழ்வுடன் கொடுப்போம்" என்று சொல்லி, தரையின் மேல் துணியை விரித்துக் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டனர்.
26 சாந்துக் காறைகள், ஆரங்கள், மதியானிய அரசர் பயன்படுத்திய பொன்னாடைகள், ஒட்டகங்களின் சரப்பளிகளும், இன்னும் கெதெயோன் கேட்டு வாங்கின ஆயிரத்து எழுநூறு பொன் சீக்கல் எடையுள்ள பொற் கடுக்கன்களும் இருந்தன.
27 அவற்றைக் கொண்டு கெதெயோன் ஓர் எபோத்தைச் செய்து தன் ஊரான எபிராவில் அதை வைத்தான். அதனாலேயே இஸ்ராயேலர் சிலை வழிப்பாட்டுக்காரரானார்கள். கெதெயோனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அதுவே கேடாயிற்று.
28 மதியானியர் இஸ்ராயேலர் மக்கள் முன்பாகத் திரும்ப தலையெடுக்காதபடி தாழ்த்தப் பட்டனர். கெதெயோன் ஆண்டபோது நாடு நாற்பது ஆண்டு அமைதியுற்றிருந்து.
29 யோவாசின் மகன் ஜெரோபாவால் தன் வீடு சென்று அங்கே வாழ்ந்து வந்தான்.
30 அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால், அவனுக்குப் பிறந்தோர் எழுபதுபேர்.
31 சிக்கேமிலிருந்த அவன் வைப்பாட்டியும் அவனுக்கு அபிலெமேக் என்ற மகனைப் பெற்றாள்.
32 யோவாசின் மகன் கெதெயோன் முதிர்ந்த வயதில் இறந்து எஸ்ரி வம்சத்து எபிராவிலே தன் தந்தை யோவாசு கல்லறையில் புதைக்கப்பட்டான்.
33 கெதெயோன் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் மீண்டும் தவறிப் பாவாலை வழிபட்டனர். பாவாலே தம் கடவுள் என்று அவர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
34 தங்களைச் சூழ்ந்திருந்த எல்லா எதிரிகளின் கையினின்றும் தங்களை மீட்ட ஆண்டவரை அவர்கள் மறந்தார்கள்.
35 ஜெரோபாவால் என்ற கெதேயோன் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த நன்மைகளுக்குத் தக்கபடி அவனுடைய வீட்டாருக்கு அவர்கள் கருணை காட்டவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×