Bible Versions
Bible Books

1 Peter 3 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மனைவியரே, நீங்கள் அங்ஙனமே உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
2 இதனால், அவர்களுள் சிலர் தேவ வார்த்தையை ஏற்காதவர்களாய் இருந்தால், மரியாதையும் கற்பும் உள்ள உங்கள் நடத்தையை அவர்கள் காணும் போது, வார்த்தை எதுவும் தேவைப்படாமல் தம் மனைவியருடைய நன்னடத்தையாலே வசமாக்கப்படுவார்கள்.
3 சடை பின்னுவதும், பொன் நகைகள் அணிவதும், உடை மாற்றுவதுமாகிய வெளி அலங்கரிப்பில் உங்கள் அழகு அமையாமல்,
4 சாந்தமும் அமைதியுமுள்ள மனப்பான்மையாகிய அழியாத அலங்கரிப்பில் அமையட்டும். அந்த அலங்கரிப்போ மனித உள்ளத்தில் மறைவாயிருப்பதொன்று. அதுவே கடவுள் முன்னிலையில் விலை உயர்ந்தது.
5 இவ்வாறுதான் அக்காலத்தில், கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்த பரிசுத்த பெண்டிரும், தங்கள் கணவர்க்குப் பணிந்திருப்பதையே தங்கள் அணியாகக் கொண்டிருந்தார்கள்.
6 இவ்வாறே சாராள், ஆபிரகாமுக்குப் பணிந்திருந்தாள்; அவரைத் தன் தலைவன் என அழைத்தாள். நன்மை செய்து, எத்தகைய அச்சத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் இடங்கொடாமலிருந்தால், நீங்கள் சாராளின் புதல்வியராய் இருப்பீர்கள்.
7 அவ்வாறே கணவர்களே, நீங்களும் நல்லறிவோடு மணவாழ்க்கை நடத்துங்கள்; பெண்ணினம் வலுக் குறைந்தது என்பதால் மட்டுமன்று, வாழ்வுதரும் இறையருளுக்கு அவர்கள் உங்கள் உடன் உரிமையாளர் என்பதாலும், அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்; அப்போது தான், உங்கள் செபங்களுக்குத் தடை ஏற்படாது.
8 இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.
9 தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; பழிக்குப்பழி கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள்; ஏனெனில், இறைவனின் ஆசிக்கு உரிமையாளர் ஆவதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
10 " வாழ்வை விரும்பி இன்பநாளைச் சுவைக்க விழைபவன், தீமையினின்று தன் நாவைக் காத்துக் கொள்க; வஞ்சகப் பேச்சினின்று தன் வாயைக் காத்துக்கொள்க;
11 தீமையினின்று விலகி நன்மை செய்க; அமைதியை நாடி அதனைத் தொடர்க;
12 ஆண்டவர் நீதிமான்கள் மேல் தம் பார்வையைச் செலுத்துகிறார்; அவர்களது வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறார்; தீமை செய்வோருக்கோ ஆண்டவர் கடுமுகம் காட்டுகிறார்".
13 நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால், உங்களுக்கு யார் தீமை செய்யப் போகிறார்கள்?
14 நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.
15 ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.
16 ஆனால், விளக்கங் கூறும் போது சாந்தத்தோடும் மதியாதையோடும் பேசுங்கள்; உங்கள் மனச்சாட்சியும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்போதுதான், நீங்கள் அவதூறுக்கு ஆளாகும் போது, உங்கள் கிறிஸ்தவ நன்னடைத்தையைப் பழிப்பவர்கள் நாணமடைந்து போவார்கள்.
17 ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
18 கிறிஸ்துவைப் பாருங்கள்; நீதியுள்ள அவர், அநீதருக்காக இறந்தார்; நன்மைக் கடவுளிடம் சேர்க்க, பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார்; ஊன் உடலில் சாவுக்குள்ளானார்;
19 ஆனால், தேவ ஆவியில் உயிர் பெற்றார். அந்த ஆவியைக் கொண்டே, அவர் சிறையிலிருந்த ஆன்மாக்களிடம் சென்று, அவர்களுக்குத் தம் செய்தியை அறிவித்தார்.
20 இவ்வான்மாக்கள், அன்று நோவா, பேழையைச் செய்துகொண்டிருந்த காலத்தில், கடவுள் பொறுமையோடு காத்திருந்த போது, கீழ்ப்படியாமல் போனவர்கள், அப்பேழையில் நுழைந்து, சிலர் -அதாவது எட்டுப்பேர் - நீரின் வாயிலாய்க் காப்பாற்றப்பட்டனர்.
21 இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.
22 அவர் விண்ணகம் சென்ற பின், அதிகாரம் தாங்குவோர், வலிமை மிக்கோர், தூதர் அனைவரையும் தமக்குட்படுத்தி, கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×