Bible Versions
Bible Books

Ephesians 5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஆகவே, அன்புப் பிள்ளையாய், நீங்கள் கடவுளைப்போல் ஒழுக முயலுங்கள்.
2 கிறிஸ்து தம்மையே கடவுளுக்கு நறுமணம் வீசும் காணிக்கையும் பலியுமாக நம்மை முன்னிட்டுக் கையளித்து உங்கள் மேல் அன்பு கூர்ந்தது போல், நீங்களும் அன்பு கொண்டு ஒழுகுங்கள்.
3 கெட்ட நடத்தை. அசுத்தம், பொருளாசை முதலியவற்றின் பெயர் முதலாய் உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.
4 நாணங்கெட்ட பேச்சு, மூடச்சொல் பகடித்தனம் முதலியன வேண்டாம். இவையெல்லாம் சரியல்ல; 'நன்றி கூருதலே தகும்.
5 ஏனெனில், கெட்ட நடத்தையுள்ளவன், காமுகன், சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான். இது உங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கட்டும்.
6 வீண் வார்த்தைகளால் யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். எனெனில், இவையே இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்கள் மீது அவருடைய சினத்தை வரவழைக்கின்றன.
7 ஆகவே நீங்கள் அவர்களோடு ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்பொழுது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள் ஒளியின் மக்களாக நடந்துகொள்ளுங்கள்.
9 ஒளியின் கனிகளோ நன்மை, நீதி, உண்மை.
10 ஆண்டவருக்கு உகந்தது எது என்று உய்த்துணருங்கள்.
11 இருளின் பயனற்ற செயல்களைச் செய்பவர்களோடு சேர வேண்டாம்; அவை தவறெனக் காட்டுங்கள்.
12 மறைவில் அவர்கள் செய்வதெல்லாம் சொல்லக்கூட வெட்கமாயிருக்கிறது.
13 ஒளியானது அவை அனைத்தும் தவறெனக் காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.
14 அவ்வாறு வெளியாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. எனவேதான், 'தூங்குபவனே எழுந்திரு. இறந்தோரினின்று எழுந்து நில். கிறிஸ்து உன்மேல் ஒளிர்ந்தெழுவார்.' என்றுள்ளது,
15 ஆகையால், உங்கள் நடத்தையைப் பற்றிக் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் நடக்காமல் ஞானிகளாக நடந்து கொள்ளுங்கள்.
16 நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; இது பொல்லாத காலம்.
17 எனவே, அறிவிலிகளாய் இராமல் ஆண்டவருடைய திருவுளம் யாது என அறிந்துணருங்கள்.
18 குடிமயக்கத்திற்கு இடங்கொடாதீர்கள். அதனால் ஒழுக்கக் கேடுதான் விளையும்.
19 தேவ ஆவியிலே நிறைவு பெறுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்கள், புகழ்ப்பாக்கள், பாடல்கள் இவற்றைக் கொண்டு உரையாடி, ஆண்டவருக்கு உளமார இசை பாடிப் புகழுங்கள்.
20 இங்ஙனம், கடவுளும் தந்தையுமானவருக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், அனைத்திற்காகவும் எந்நேரமும் நன்றி கூறுங்கள்.
21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22 மனைவியரே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல் உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.
24 அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல் மனைவியரும் கணவர்க்கு அனைத்திலும் பணிந்திருந்தல் வேண்டும்.
25 கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
26 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.
27 அத்திருச்சபை கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றி, பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்ய வேண்டுமென்று அவர் திருவார்த்தையாலும் முழுக்கினாலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்த மாக்குவதற்குத் தம்மைக் கையளித்தார்.
28 அவ்வாறே கணவர்களும் தம் மனைவியரைத் தம் சொந்த உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்யவேண்டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான்.
29 தன்னுடைய உடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை; எவனும் அதைப் பேணி வளர்க்கிறான், கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையைப் பேணி வளர்க்கிறார்.
30 எனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.
31 "அதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான், இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள்."
32 இதில் அடங்கியுள்ள மறையுண்மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன்.
33 சுருங்கக் கூறின், உங்களுள் ஒவ்வொருவனும் தன் மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவியின்மீது அன்பு காட்டுவானாக. மனைவியும் தன் கணவனுக்கு அஞ்சி நடப்பாளாக.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×