Bible Versions
Bible Books

Judges 2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 கல்கலாவினின்று ஆண்டவருடைய தூதர் அழுகிறவர்களின் இடத்திற்குப் போய், "எகிப்து நாட்டினின்று உங்களை மீட்டு, உங்கள் முன்னோர்க்கு நான் வாக்களித்த நாட்டில் சேர்த்தேன். மேலும், உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறேன் என்றும் வாக்களித்தேன்,
2 ஆனால், அதனை முன்னிட்டு நீங்கள் இந்நாட்டாரோடு யாதொரு உடன்படிக்கையும் செய்யக் கூடாது என்றும், அவர்களின் பலிபீடங்களைத் தகர்த்துடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தேன். இப்படி நான் கட்டளையிட்டிருந்த போதிலும் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3 எனவே உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழிக்கமாட்டேன். அவர்களே உங்கள் எதிரிகளாயும், அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கேடுமாய் இருப்பார்கள்" என்றார்.
4 ஆண்டவருடைய தூதர் இஸ்ராயேலர் எல்லாரும் கேட்க இச் சொற்களைக் கூறின போது அவர்கள் கூக்குரலிட்டு அழுதார்கள்.
5 அவ்விடத்திற்கு அழுகிறவர்கள் இடம் அல்லது கண்ணீரின் இடம் என்று பெயர் வழங்கிற்று. அவர்கள் அவ்விடத்திலேயே ஆண்டவருக்குப் பலி செலுத்தினர்.
6 யோசுவா மக்களை அனுப்பிவிட்டார். இஸ்ராயேல் மக்களும் தத்தம் பாகத்தை உரிமையாக்கிக் கொள்ளப்போனார்கள்.
7 அவரது வாழ்நாள் முழுவதும், அவருக்குப்பின் நெடுநாள் வந்தவர்களும் ஆண்டவர் இஸ்ராயேலருக்குச் செய்து வந்த அனைத்தையும் அறிந்திருந்தவர்களுமான மூப்பர்களின் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலர் ஆண்டவரை வழிபட்டு வந்தனர்.
8 ஆண்டவரின் அடியானும் நூனின் மகனுமான யோசுவா தம் நூற்றிப் பத்தாம் வயதில் இறந்தார்.
9 காவாஸ் மலைக்கு வடபுறத்து எபிராயீம் மலைமேல் அவரது சொந்தப் பங்கான தாம்னாத்சேரேயின் எல்லையில் அவரைப் புதைத்தனர்.
10 அந்தத் தலைமுறையார் எல்லாரும் தங்கள் முன்னோர் பதம் சேர்ந்தனர். பின்னர், ஆண்டவரையும் அவர் இஸ்ராயேலுக்குச் செய்திருந்த நன்மைகளையும் அறியாதிருந்த வேறு மக்கள் தோன்றினர்.
11 அப்போது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் புரிந்து பாவாலிமைத் தொழுதனர்.
12 எகிப்து நாட்டிலிருந்து தம் முன்னோரை மீட்டவரும், தம் தந்தையரின் ஆண்டவருமான கடவுளை விட்டுவிட்டு அன்னிய தேவர்களையும், தம்மைச் சுற்றிலும் இருந்த மக்களின் தெய்வங்களையும் பின்பற்றி வழிபட்டனர். இதனால் ஆண்டவருக்குக் கோபமூட்டினர்.
13 அவரை இகழ்ந்து, பாவாலையும் அஸ்தரோத்தையும் தொழுதனர்.
14 எனவே ஆண்டவர் இஸ்ராயேலர் மேல் கோபம் கொண்டு கொள்ளைக்காரர் கைகளில் அவர்களை ஒப்படைக்க, இவர்களும் அவர்களைப் பிடித்துத் தங்களைச் சுற்றிலுமிருந்த எதிரிகளுக்கு விற்று விட்டனர். பகைவர்களை எதிர்க்க அவர்களால் முடியவில்லை.
15 ஆனால், அவர்கள் எங்குப் போன போதிலும், ஆண்டவர் வாக்களித்திருந்தபடி அவர் கைகள் அவர்கள் மேல் இருந்ததால் அவர்கள் மிகவும் துன்புற்றனர்.
16 அவர்களைத் துன்புறுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை மீட்க ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பினார். ஆனால் இவர்களுக்குச் செவிமடுக்கக் கூட அவர்கள் விரும்பவில்லை.
17 அன்னிய தெய்வங்களுடன் விபசாரம் செய்து அவற்றை வழிப்பட்டனர். வெகு விரைவில் அவர்கள் தங்கள் முன்னோரின் வழிகளை விட்டு விட்டு, ஆண்டவரின் கற்பனைகளைக் கேட்டிருந்தும் அவற்றிற்கு முற்றிலும் மாறாய் நடந்தனர்.
18 ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பி, அவர்களின் காலத்திலே இரக்கத்தால் மனம் உருகி, துன்புறுவோரின் பெருமூச்சுக்களுக்குச் செவிமடுத்து, அவர்களைத் துன்புறுத்திக் கொன்றவர்களிடமிருந்து மீட்டு வந்தார்.
19 நீதிபதி இறந்த போதோ இஸ்ராயேலர் திரும்பவும் தீயோராகித் தம் முன்னோர் செய்த கேடுகளை விட இழிவான காரியங்களைச் செய்து, அன்னிய தெய்வங்களைப் பின்பற்றி வழிபட்டு வந்தனர். அவர்கள் மேன்மேலும் பாவம் செய்து கொண்டேயிருந்தனர். தங்கள் முன்னோரின் முரட்டு வழியையும் விட்டுவிடவில்லை.
20 தமது கோபம் இஸ்ராயேல் மக்கள் மேல் எழ, ஆண்டவர், "இம்மக்களின் முன்னோருடன் நாம் செய்திருந்த உடன்படிக்கையை மீறினதாலும், நம் சொற்களை இவர்கள் அவமதித்துப் பின்பற்றாத படியாலும்,
21 யோசுவா சாகும்போது அழிக்காது விட்டு விட்ட இம்மக்களை நாமும் அழிக்கமாட்டோம்.
22 இப்படிச் செய்து, இஸ்ராயேர் தங்கள் முன்னோர் பின்பற்றினது போலவே ஆண்டவரின் வழியைத் தாங்களும் பின்பற்றி அவ்வழியில் நடக்கிறார்கள் என்று சோதித்துப் பார்ப்போம்" என்றார்.
23 எனவே, அந்த நாடுகளை ஆண்டவர் உடனே அழிக்க மனமின்றி அவற்றை யோசுவா கையில் ஒப்படைக்காமலே விட்டுவிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×