Bible Versions
Bible Books

Numbers 32 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் திரளான மந்தைகளை வைத்துக் கொண்டு பெரும் செல்வம் படைத்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் யாஜேர் நாடும் காலாத் நாடும் ஆடுமாடுகளை மேய்ப்பதற்குத் தகுந்த புல்வெளியாய் இருக்கக் கண்டு,
2 மோயீசனிடமும் குருவாகிய எலெயஸாரிடமும் சபையின் தலைவர்களிடமும் வந்து,
3 அவர்களை நோக்கி: அத்தரோட் திபோன், யாஜோ, நெமிரா, ஏசெபோன், சபான், நேபோ, பெயோன் என்னும் ஊர்கள்,
4 இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவர் தண்டித்துக் கண்டித்த நாட்டில் உள்ளன. அந்நாடு ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு மிச் செழிப்பானதாகையாலும், அடியார்களுக்குத் திரளான மந்தைகள் இருப்பதனாலும்,
5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததாயின், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கொண்டு போகாமல், இந்த நாட்டையே உம் அடியார்களுக்கு உடைமையாகக் தரவேண்டும் என்றார்கள்.
6 மோயீசன் அவர்களுக்கு மறுமொழியாக: உங்கள் சகோதரர் போருக்குப் போக வேண்டியதாய் இருக்கும்போது நீங்கள் இங்கேயா இருக்கப்போகின்றீர்கள்?
7 ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்கு அவர்கள் போகத் துணியாவண்ணம் நீங்கள் அவர்களுடைய மனம் கலங்கச்செய்வதன்ன?
8 அந்த நாட்டைப் பார்த்துவர நான் உங்கள் தந்தையரைக் காதேஸ் பார்னேயிலிருந்து அனுப்பினபோது, அவர்களும் இப்படியன்றோ செய்தார்கள்?
9 அவர்கள் கொடி முந்திரிப்பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டைப் பார்த்து வந்தபோது, ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் போகாதபடிக்கு அவர்களுடைய இதயத்தைக் கலங்கடித்து விட்டார்கள்.
10 அதனால் ஆண்டவர் சினந்து:
11 நமது திருவுளத்திற்கு அடங்கி நடந்த செனேசையனான ஜெப்போனே புதல்வன் காலேபும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் ஆகிய இவ்விருவரையும் தவிர, எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபதுவயதும் அதற்கு மேற்பட்டவர்களில் ஒருவனும், நாம் ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய அந்த நாட்டைக் காணமாட்டான்;
12 ஏனென்றால், அவர்கள் நம்மைப் பின்பற்ற மனம் ஒப்பவில்லை என்று ஆணையிட்டுத் திருவுளம்பற்றினார்.
13 அப்படியே இஸ்ராயேலின்மேல் ஆண்டவர் கோபம் கொண்டு, தம் முன்னிலையில் அக்கிரமம் செய்த அந்த மக்கள் எல்லாம் அழியுமட்டும் அவர்களைப் பாலைவனத்தில் நாற்பதாண்டு அலையச் செய்தார்.
14 இப்பொழுதும், இதோ இஸ்ராயேலின்மேல் ஆண்டவருடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச் செய்யும்படிக்கு நீங்கள் கெட்ட மனிதர்களின் பிறப்பும் சந்ததியுமாய் இருந்து, உங்கள் தந்தையருக்குப் பதிலாய் எழும்பியிருக்கிறீர்களே!
15 நீங்கள் அவரைப் பின்பற்றி, நடக்க மனமில்லாமல் இருந்தால், அவர் பாலைவனத்தில் மக்களை நிறுத்திவைப்பார். இவ்வாறு நீங்கள் இந்த மக்களெல்லாம் அழிவதற்குக் காரணமாய் இருப்பீர்கள் என்று மோயீசன் சொன்னார்.
16 அப்பொழுது அவர்கள் அவரருகே வந்து: நாங்கள் ஆடுகளுக்குப் பட்டிகளையும் மாடு முதலியவைகளுக்குத் தொழுவங்களையும் அமைத்து, நம்முடைய பிள்ளைகளுக்காக அரண் செய்யப்பட்ட நகரங்களையும் கட்டுவோம்.
17 அன்றியும், நாங்கள் இஸ்ராயேல் மக்களை அவரவர்களுடைய இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையிலும் போருக்கு ஆயத்தமாய் அவர்களுக்கு முன்பாகச் போர்க்களத்துக்குப் போவோம். ஊராருடைய வஞ்சகத்தை முன்னிட்டு, எங்களையும் எங்களுக்குண்டான எல்லாவற்றையும் அரணுள்ள நகரங்களில் வைத்துவிட்டு நாங்கள் போவோம்.
18 இஸ்ராயேல் மக்கள் யாவரும் தங்கள் தங்கள் காணியாட்சியை உரிமையாக்கிக் கொண்ட பிற்பாடு மட்டுமே நாங்கள் திரும்பி வீட்டுக்கு வருவோம்.
19 மேலும், யோர்தானுக்குக் கிழக்கே எங்களுக்கு உரிமை கிடைதித்திருக்க, நாங்கள் நதிக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் வேறே உரிமை ஒன்றும் கேட்கமாட்டோம் என்று சொன்னார்கள்.
20 அதற்கு மோயீசன் அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்வதாயிருந்தால் ஆண்டவர் முன்னிலையில் போருக்கு ஆயத்தமாப் புறப்படுங்கள்.
21 ஆண்டவர் தம்பகைவரை அழித்தொழிக்கு மட்டும், நீங்கள் யாவரும் ஆயுதம் தாங்கியவராய் யோர்தானைக் கடந்து போங்கள்.
22 அந்த நாடு முழுவதும் ஆண்டவருக்கு வயப்படுத்தப்பட்ட பிற்பாடே, நீங்கள் ஆண்டவருக்கும் இஸ்ராயேலுக்கும் முன்பாகக் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள். அதன்பிறகு, நீங்கள் விரும்பிய இந்த நாடு ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்கு உரிமையாகும்.
23 நீங்கள் சொல்லியபடி செய்யாமல் போனாலோ, ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவர்களாய் இருப்பீர்கள் என்பதற்கு ஐயமில்லை. அந்த பாவம் உங்களைத் தொடர்ந்து பீடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
24 ஆகையால், உங்கள் சிறுவர்களுக்காக நகரங்களையும், உங்கள் ஆடுமாடு முதலியவைகளுக்காகப் பட்டி தொழுவங்களையும் கட்டுங்கள். பிறகு உங்கள் சொற்படி செய்யுங்கள் என்றார்.
25 அப்பொழுது காத் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் மோயீசனிடம்: நாங்கள் உம் அடியார்கள். ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்வோம்.
26 எங்கள் சிறுவர்களையும் பெண்களையும் ஆடுமாடு முதலியவைகளையும் நாங்கள் கலாத்தின் நகரங்களிலே விட்டுவிட்டு,
27 அடியார் அனைவரும், கடவுள் சொன்னது போல், ஆயுதம் தாங்கிப் போருக்குப் போவோம் என்றார்கள்.
28 அப்பொழுது மோயீசன் குருவாகிய எலெயஸாரையும், கானின் புதல்வனாகிய யோசுவாவையும், இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களையும் நோக்கி:
29 காத்தின் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாருமாகிய இவர்கள் ஆண்டவர் முன்னிலையில் போருக்கு ஆயத்தமாய் உங்களோடுகூட யோர்தானைக் கடந்து போவார்களாயின், அந்த நாடு உங்களுக்குக் கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கலாத் நாட்டை உரிமையாகக் கொடுப்பீர்கள்.
30 ஆனால், அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாய் உங்களோடுகூடக் கானான் நாட்டைக் கடந்து போக விருப்பமில்லாதிருப்பின், அவர்கள் உங்கள் நடுவே குடியேறக்கடவார்கள் என்றார்.
31 இதற்குக் காத்தின் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் மறுமொழியாக: ஆண்டவர் அடியார்களுக்குச் சொன்னது போல் நாங்கள் செய்வோம்.
32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையிலே போருக்கு ஆயத்தமாய்க் கானான் நாட்டிற்கு மகிழ்ச்சியோடு போவோம். மேலும், நாங்கள் யோர்தானுக்கு இக்கரையில் எங்கள் சொந்த உடைமையை ஏற்கெனவே பெற்றுள்ளோமென்று வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிறோம்என்றார்கள்.
33 அப்பொழுது மோயீசன் காத் கோத்திரத்தாருக்கும், ரூபன் கோத்திரத்தாருக்கும், சூசையின் புதல்வனாகிய மனாஸேயின் பாதிக் கோத்திரத்துக்கும் அமோறையருடைய அரசனாகிய செகோனின் நாட்டையும், பாசான் அரசனான ஓகின் நாட்டையும், அவர்களைச் சேர்ந்த நாடுகளையும் நகரங்களையும் கொடுத்தார்.
34 பின்பு காத்தின் கோத்திரத்தார் காத், திபோன், அத்தரோட்,
35 அரொவர், எத்திரோட், சொப்பான், யாஜேர், ஜெக்பா,
36 பெத்னேம்ரா, பெட்டரான் என்னும் அரணுள்ள நகரங்களையும், தங்கள் மந்தைகளுக்குப் பட்டிதொழுவங்களையும் கட்டினார்கள்.
37 ரூபன் கோத்திரத்தாரோ ஏஸெபோன், ஏலையாலை, கரியத்தயீம் என்னும் நகரங்களையும்,
38 நாபோ, பாவால், மையோன், சபமா என்னும் நகரங்களையும் புதிப்பித்து அவற்றிற்குப் பெயரிட்டார்கள்,
39 ஒருநாள் மனாசேயின் புதல்வனான மக்கீரின் புதல்வர்கள் கலாத்துக்குப் போய், அதில் வாழ்ந்து வந்த அமோறையரை வெட்டி வீழ்த்தி, நாட்டைப் பாழாக்கிப் பிடித்துக் கொண்டார்கள்,
40 ஆதலால், மோயீசன் மனாஸே புதல்வனாகிய மக்கீருக்குக் கலாத் நாட்டைக் கொடுத்தார். மனாஸே அங்கே குடியேறினான்.
41 அவன் புதல்வனாகிய ஜயீர் கலாத்துக்கடுத்த ஊர்களைக் கைப்பற்றி, அவைகளுக்கு ஆவாட்ஜயீர் - அதாவது: ஜயீரூர் - என்று பெயரிட்டான்.
42 நொபே என்பவனும் கான் நாட்டையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றி அவற்றிற்கு நொபே என்று தன் பெயரையிட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×