Bible Versions
Bible Books

Daniel 8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 முன்பு கண்ட காட்சிக்குப் பிறகு, மன்னன் பல்தசாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் தானியேலாகிய நான் வேறொரு காட்சி கண்டேன்.
2 அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் நாட்டிலுள்ள சூசா என்னும் அரண் சூழ்ந்த பட்டணத்தில் நான் இருந்தேன்; அங்கே ஊலாய் ஆற்றை நோக்கியிருக்கும் வாயிலருகே நான் இருந்ததாகக் கண்டேன்.
3 நான் கண்களை உயர்த்திப் பார்த்தேன்; இதோ, ஒரு செம்மறிக்கடா அந்த ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தது; அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன; இரண்டும் நீளமான கொம்புகள்; ஆயினும் அவற்றுள் ஒன்று மற்றதை விட நீளமானது; அது வளர்ந்து கொண்டே வந்தது.
4 அந்தச் செம்மறிக்கடா தன் கொம்புகளினால் மேற்கு, வடக்கு, தெற்குப் பக்கங்களில் முட்டுவதைக் கண்டேன்; அதனை எதிர்த்து நிற்க எந்த மிருகத்தாலும் இயலவில்லை; அதனிடமிருந்து (அவற்றைத்) தப்புவிக்கவல்ல யாருமில்லை; அதுவும் தன் விருப்பம் போலச் செய்து பெருமிதம் கொண்டது.
5 நான் அதையே கவனித்துக் கொண்டிருந்தேன்; அந்நேரத்தில் அதோ மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கடா ஒன்று நிலத்தில் கால்பாவாமல் பூமி மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக் கடாவின் கண்களுக்கு இடையில் விந்தையான ஒரு கொம்பிருந்தது.
6 இரண்டு கொம்புகளுள்ளதும், ஆற்றங்கரையில் நின்றிருந்ததுமாக நான் பார்த்த அந்தச் செம்மறிக் கடாவை நோக்கி வெள்ளாட்டுக் கடா முன்னேறி வந்தது; வந்து தன் ஆற்றலையெல்லாம் கூட்டி அதன் மேல் பாய்ந்தது.
7 இவ்வாறு அது செம்மறிக்கடாவை நெருங்கி, அதன் மேல் கடுஞ் சினங்கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துப் போட்டது; செம்மறிக்கடாவை அதன் வல்லமையினின்று தப்புவிப்பார் யாருமில்லை.
8 அதன்பின்னர் வெள்ளாட்டுக்கடா மிக்கப் பெருமிதம் கொண்டு திரிந்தது; ஆனால் அது வலிமையோடு இருந்த நாட்களில் அந்தப் பெரிய கொம்பு முறிந்து விட்டது; அதனிடத்தில் வேறு நான்கு கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.
9 அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பொன்று கிளம்பிற்று; அது தேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் மகிமையுள்ள நாட்டை நோக்கியும் மிகப் பெரியதாக வளர்ந்தது.
10 அது வானத்தின் சேனை வரை வளர்ந்தது; விண்மீன்களின் சேனைகளுள் சிலவற்றைக் கீழே தள்ளி மிதித்தது.
11 மேலும் அது சேனைகளின் தலைவர் வரைக்கும் தன்னையே உயர்த்தி, அவரிடமிருந்து அன்றாடத் தகனப்பலியைப் பறித்துக் கொண்டு, அவருடைய பரிசுத்த இடத்தையும் பங்கப்படுத்தி அழித்தது.
12 பாவத்தின் காரணமாய் அந்தச் சேனைக்கும், இடைவிடாத தகனப்பலிக்கும் எதிராக அதற்கு வல்லமை தரப்பட்டது; உண்மை மண்ணிலே வீழ்த்தப்பட்டது; அந்தக் கொம்பு முனைந்து முன்னேறிற்று.
13 அப்போது பரிசுத்தர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்; வேறொரு பரிசுத்தர் முன்பேசியவரிடம், "இடைவிடாத தகனப்பலியையும் பாழாக்கும் அக்கிரமத்தையும், பரிசுத்த இடமும் அந்தச் சேனையும் காலால் மிதிபடுவதையும் பற்றிய இந்தக் காட்சி எதுவரைக்கும் நீடிக்கும்?" என்றார்.
14 அதற்கு அவர், "இரண்டாயிரத்து முந்நூறு காலை மாலையளவு நீடிக்கும்; அதன் பிறகு பரிசுத்த இடம் தூய்மை நிலையைத் திரும்ப அடையும்" என்றார்.
15 தானியேலாகிய நான் இந்தக் காட்சியின் உட்பொருள் அறியத் தேடுகையில், இதோ மனித சாயலைக் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக நின்றார்.
16 அப்பொழுது ஊலாய் ஆற்றின் நடுவில் ஒரு மனிதக் குரல் கேட்டது; அது, "கபிரியேலே, இந்தக் காட்சியை விளக்கிச் சொல்" என்று உரத்த குரலில் சொன்னது.
17 அவர் நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்; வரும் போது, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; ஆனால் அவர் என்னை நோக்கி, மனிதா, இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள்" என்றார்.
18 அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் மயங்கித் தரையில் குப்புற விழுந்து கிடந்தேன்; அவர் என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கச் செய்து, எனக்கு விளக்கினார்:
19 கோபத்தின் முடிவுநாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்; ஏனெனில் காலம் முடிவுறப் போகிறது.
20 நீ கண்ட கொம்புகளுடைய செம்மறிக்கடா மேதியர், பேர்சியர்களின் அரசனைக் குறிக்கிறது;
21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க அரசனைக் குறிக்கிறது; அதன் கண்களுக்கு நடுவிலிருந்து பெரிய கொம்பு முதல் அரசனாகும்.
22 அது முறிந்து போன பின்பு, அதற்குப் பதிலாக எழும்பிய நான்கு கொம்புகள், அந்த இனத்தாருள் எழும்பப் போகும் நான்கு அரசுகள் என்க; ஆனால் அவனுடைய ஆற்றல் இவற்றுக்கு இராது.
23 அவர்களுடைய ஆட்சி முடிவுற்ற பிறகு, அக்கிரமங்கள் மலிந்து நிறைவுறும் போது, முன்கோபமுள்ளவனும் கூர்மதி கொண்டவனுமாகிய ஓர் அரசன் தோன்றுவான்;
24 அவனுடைய வல்லமை பெருகும், ஆனால் அவனது சொந்த ஆற்றலால் அன்று- அஞ்சத் தக்க வகையில் அழிவு வேலை செய்வான்; செய்யும் செயலிலெல்லாம் வெற்றியே காண்பான், வல்லவர்களையும் பரிசுத்தர்களையும் அழிப்பான்.
25 வஞ்சகம் அவன் கையில் சிறந்த கருவியாய் இருக்கும், அவன் உள்ளம் இறுமாப்பால் நிறைந்திருக்கும்; எதிர்பாராத நேரத்தில் பலரைத் தாக்கிக் கொலைசெய்வான், இறுதியில் தலைவர்க்கெல்லாம் தலைவரை எதிர்ப்பான்; ஆயினும் மனிதன் எவனும் தலையிடாமலே, அவனே அழிந்து ஒழிந்துபோவான்.
26 இதுவரை சொல்லி வந்த காலை மாலைகள் பற்றிய காட்சி உண்மையானது, நீயோ இந்தக் காட்சியை மறைத்து வை; ஏனெனில் பல நாட்களுக்குப் பிறகே இது நடைபெறும்."
27 தானியேலாகிய நானோ சோர்வடைந்து சில நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தேன்; பிறகு எழுந்து அரசனின் அலுவல்களைச் செய்தேன்; ஆயினும் அந்தக் காட்சியினால் இன்னும் திகைப்புற்றிருந்தேன்; அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×