Bible Versions
Bible Books

Daniel 10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 பேர்சியரின் மன்னனாகிய கீருசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பல்தசார் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஓர் இறைவாக்கு அறிவிக்கப்பட்டது; அதுவோ பெரும் போராட்டத்தைப் பற்றியதோர் உண்மை வாக்கு; அவர் அந்த வாக்கைக் கண்டுபிடித்தார், அந்தக் காட்சியும் அவருக்கு விளங்கிற்று.
2 அந்நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்;
3 அந்த மூன்று வார முழுவதும் நான் சுவையான உணவு கொள்ளவில்லை; இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை; என் தலையில் எண்ணெய் கூடத் தடவிக் கொள்ளவில்லை.
4 முதல் மாதத்தில் இருபத்து நான்காம் நாள் நான் திக்ரிஸ் என்னும் பெரிய ஆற்றின் அருகில் இருந்தேன்.
5 என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்: இதோ மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் இடையில் மிகத் தூய்மையான தங்கக் கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன்.
6 அவருடைய உடல் பளிங்கு போல் இருந்தது, அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப் போலிருந்தது; கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலம் போலும், அவர் பேசிய வார்த்தைகளின் ஒலி மக்கட் கூட்டத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
7 தானியேலாகிய நான் மட்டுமே அந்தக் காட்சியைக் கண்டேன்; என்னிடமிருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை; ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று மறைவிடத்தில் ஒளிந்து கொள்ள ஓட்டமெடுத்தார்கள்.
8 தனித்துவிடப் பட்ட நான் மட்டும் இந்தப் பெரிய காட்சியைக் கண்டேன்; என் உடலெல்லாம் தளர்ந்து விட்டது; ஒளிவிடும் என் முகத்தோற்றம் அஞ்சத் தக்க வகையில் மாறிப் போயிற்று; என் உடலில் வலுவே இல்லாது போயிற்று.
9 அப்போது அவருடைய சொற்கள் என்காதில் விழுந்தன; அவற்றைக் கேட்டதும் முகங்குப்புறத் தரையில் விழுந்து அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன்.
10 அப்பொழுது இதோ, கையொன்று என்னைத் தொட்டது; நடுங்கிக் கொண்டிருந்த என்னை, கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து நிற்கச் செய்தது.
11 அவர் என்னை நோக்கி, "மிகவும் அன்புக்குரிய தானியேலே, நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்; காலூன்றி நில்; ஏனெனில் உன்னிடந்தான் நான் அனுப்பப்பட்டேன்" என்றார்; இந்த வார்த்தையை அவர் எனக்குச் சொல்லும் போது, நடுக்கத்தோடு நான் எழுந்து நின்றேன.
12 அப்போது அவர் என்னைப் பார்த்துக் கூறினார்: "தானியேலே, அஞ்சவேண்டாம். புரிந்துகொள்ள வேண்டும் என்னும் உள்ளத்தோடு உன் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தொடங்கிய நாள் முதல் உன் மன்றாட்டு கேட்கப்பட்டது; உன் மன்றாட்டுக்கேற்பவே நான் வந்தேன்.
13 பேர்சிய அரசின் தலைவன் இருபத்தொரு நாள் வரைக்கும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனால் முதன்மையான தலைவர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்கு உதவி செய்ய வந்தார்; ஆகவே அவரை அங்கேயே பேர்சிய அரசின் தலைவனிடம் விட்டுவிட்டு,
14 உன் இனத்தார்க்கு இறுதிநாட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை உனக்கு விளக்குவதற்காக நான் உன்னிடம் வந்தேன்; ஏனெனில் இந்தக் காட்சி நிறைவேற இன்னும் நாட்கள் பல ஆகும்."
15 அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொல்லும் போது, நான் தலை கவிழ்ந்து பேசாமல் தரையை நோக்கிக் கொண்டிருந்தேன்.
16 அப்போது இதோ, மனிதச் சாயலைக் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார்; நானும் வாய் திறந்து பேசி, எனக்கெதிரில் நின்றவரை நோக்கி, "ஐயா, இந்தக் காட்சியின் காரணமாய் என் உடல் தளர்வுற்றது; முற்றிலும் வலுவற்றுப்போனேன்.
17 தங்கள் ஊழியனாகிய நான் தங்களோடு உரையாடுவதெப்படி? ஏனெனில் என்னில் கொஞ்சமும் வலுவில்லை; என் மூச்சும் அடைத்துள்ளது" என்றேன்.
18 அப்பொழுது, மனித சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு உறுதிப்படுத்தி, "மிகுந்த அன்புக்குரியவனே, அஞ்சாதே;
19 உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு தைரியமாயிரு" என்றான். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் தைரியமுண்டாயிற்று. அப்பொழுது நான், "ஐயா பேசட்டும், என்னை உறுதிப்படுத்தினீர்" என்றேன்.
20 அப்போது அவர் கூறினார்: "உன்னிடம் நான் வந்த காரணம் இன்னதென உனக்குத் தெரியுமா? ஆனால்¢ இப்பொழுது பேர்சிய தலைவனோடு போர் தொடுக்கத் திரும்பிப் போகிறேன்; நான் அவனை முறியடித்த பின், கிரேக்க நாட்டுத் தலைவன் வருவான்.
21 ஆனால் உண்மையின் நூலில் எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன்; இதிலெல்லாம் உங்கள் தலைவராகிய மிக்கேலைத் தவிர வேறெவரும் எனக்கு உதவியாக வரவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×