Bible Versions
Bible Books

Luke 13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அவ்வேளையில் சிலர் அவரிடம் வந்து, பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடு கலந்தார் என்ற செய்தியை அறிவித்தனர்.
2 அவர் மறுமொழியாக, "இக்கலிலேயர் இத்தகைய சாவுக்கு உள்ளானார்கள் என்பதால், மற்றெல்லாக்கலிலேயரையும் விட இவர்கள் பாவிகள் என்று கருதுகிறீர்களா?
3 அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்.
4 சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; அவர்கள் யெருசலேமில் வாழ்ந்த மற்றெல்லாரையும்விடக் குற்றவாளிகள் என்று கருதுகிறீர்களா?
5 அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்" என்றார்.
6 மேலும் அவர் இந்த உவமையைக் கூறினார்; "ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்திருந்தான். அவன் வந்து அதிலே பழம் தேடியபொழுது ஒன்றுங்காணவில்லை.
7 ஆகவே, தோட்டக்காரனிடம், 'மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?' என்றான்.
8 அதற்கு அவன், 'ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.
9 காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்' என்றான்."
10 ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.
11 பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
12 அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
13 உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.
14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
15 ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
16 ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
17 என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.
18 அதன்பின் அவர், "கடவுளின் அரசு எதற்கு ஒப்பானது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
19 அது கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்.
20 மீண்டும் அவர் சொன்னதாவது: "கடவுளின் அரசை எதற்கு ஒப்பிடுவேன்?
21 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்துவைக்கிறாள். மாவு முழுவதும் புளிப்பேறுகிறது."
22 நகரங்கள் ஊர்கள்தோறும் போதித்துக்கொண்டே அவர் யெருசலேம்நோக்கிப் பயணம்செய்தார்.
23 ஒருவன் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, மீட்புப்பெறுபவர் சிலர்தாமோ?" என்று கேட்க, அவர் மக்களுக்குக் கூறியது:
24 "ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள். ஏனெனில், பலர் நுழைய முயன்றும் முடியாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 வீட்டுத் தலைவர் எழுந்து கதவைத் தாளிட, நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டிக்கொண்டே, 'ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்பீர்கள். அதற்கு அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன்' என்று கூறுவார்.
26 பின்பு நீங்கள், 'உம்முடன் உண்டோம், குடித்தோம்; நீரும் எங்கள் தெருக்களில் போதித்தீரே' என்று சொல்லுவீர்கள்.
27 ஆனால், அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன். அநீதிபுரியும் அனைவரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்' என்பார்.
28 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும், இன்னும் எல்லா இறைவாக்கினர்களும் கடவுளின் அரசில் இருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்படுவதையும் காணும்போது, புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
29 கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து கடவுளின் அரசில் பந்தி அமர்வார்கள்.
30 " இதோ! கடைசியானோர் சிலர் முதலாவர், முதலானோர் சிலர் கடைசியாவர்."
31 அந்நேரத்தில் பரிசேயர் சிலர் அவரிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்ல வேண்டுமென்றிருக்கிறான்" என்றனர்.
32 அதற்கு அவர், "நீங்கள் போய் அந்தக் குள்ளநரியிடம் இதை அறிவியுங்கள்: 'இன்றும் நாளையும் போய் ஓட்டுகிறேன். நோய்களையும் குணமாக்குகிறேன். மூன்றாம் நாள் முடிவடைவேன்.
33 ஆயினும், இன்றும் நாளையும் அடுத்த நாளும் நான் என்வழியே செல்ல வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் யெருசலேமுக்கு வெளியே மடிவது முறையாகாதே! '
34 "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று, உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே, கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல, நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன்! நீயோ உடன்படவில்லை.
35 இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும். 'ஆண்டவருடைய பெயரால் வருகிறவர் வாழி' என்று நீங்கள் கூறும் நாள்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×