Bible Versions
Bible Books

1 Corinthians 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கு. கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் அழைக்கப்பட்ட சின்னப்பனும், சகோதரனான சொஸ்தெனேயும் எழுதுவது:
2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை எங்கும் போற்றித் தொழுகின்ற அனைவரோடும் கூடப் புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு, அவர்களுக்கும் நமக்கும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தராக்கப்பட்ட உங்களுக்கு.
3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உண்டாகுக.
4 கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்கு அளிக்கப்பட்ட இறை அருளுக்காக உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறேன்.
5 ஏனெனில், கிறிஸ்துவைப் பற்றி நாங்கள் அளித்த சாட்சியம் உங்களுக்குள் உறுதிப் பட்டிருந்தால்,
6 சொல் வன்மையும் அறிவும் நிரம்பப்பெற்று அவருக்குள் எல்லா விதத்திலும் வளம் பெற்றவர்கள் ஆனீர்கள்.
7 அதனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டுமெனக் காத்திருக்கிற உங்களுக்கு ஞானக்கொடை எதிலும் குறையே இல்லை.
8 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாளில் நீங்கள் குறைபாடற்றவர்களாயிருக்க அவரே உங்களை இறுதி வரை உறுதிப்படுத்துவார்.
9 கடவுள் நம்பிக்கைக்குரியவர். 'தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவோடு நீங்கள் நட்புறவு கொள்ள அவரே உங்களை அழைத்திருக்கிறார்.
10 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்களை நான் வேண்டுவது: நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். மாறாக, ஒரே மனமும் ஒரே கருத்தும் கொண்டு, மீண்டும் முற்றிலும் ஒன்றித்து வாழுங்கள்.
11 என் சகோதரர்களே, உங்கள் நடுவில் சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோவேயாளின் வீட்டினர் எனக்கு அறிவித்தனர்.
12 உங்களுள் ஒவ்வொருவரும், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன்,. நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்' என்று பலவாறு சொல்லிக் கொள்ளுகிறீர்களாம்.
13 கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ? சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்? அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14 நல்ல வேளையாக கிரிஸ்பு, காயு ஆகிய இருவரைத் தவிர உங்களுள் வேறெவனுக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை.
15 ஆகவே,. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றது என் பெயரால் என்று யாரும் சொல்ல முடியாது.
16 ஆம், ஸ்தேபனாவின் வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். மற்றப்படி வேறெவனுக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.
17 கிறிஸ்து என்னை அனுப்பினது ஞானஸ்நானம் கொடுக்க அன்று, நற்செய்தியை அறிவிக்கவே, அதுவும் நாவன்மையை நம்பியன்று. அப்படி நம்பினால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றதாய்ப் போகும்.
18 சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுபவர்களுக்கு மடமையே; மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
19 ஏனெனில், ' ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்; அறிஞர்களின் அறிவுத் திறனை வெறுமையாக்குவேன்' என்று எழுதியுள்ளது.
20 உலகைச் சார்ந்த உன் ஞானி எங்கே? உன் சட்டவல்லுநன் எங்கே? வாதாடுவோர் எங்கே? கடவுள் உலக ஞானத்தின் மடமையைக் காட்டி விட்டார் அல்லரோ?
21 ஏனெனில், கடவுளின் ஞானம் வகுத்த திட்டத்தின்படி, உலகம் தனது ஞானத்தைக் கொண்டு கடவுளை அறிந்து கொள்ளாததால், நாங்கள் அறிவிக்கும் செய்தியின் மடமையால், விசுவாசிகளை மீட்கத் திருவுளங்கொண்டார்.
22 யூதர்கள் அருங்குறிகள் வேண்டும் என்கின்றனர்; கிரேக்கர்கள் ஞானத்தை நாடுகின்றனர்.
23 நாங்களோ, சிலுவையில் அறையுண்ட ஒரு மெசியாவை அறிவிக்கின்றோம். இது யூதர்களுக்கு இடறலாயுள்ளது. புறவினத்தாருக்கு மடமையாயுள்ளது.
24 ஆனால், யூதராயினும் சரி, கிரேக்கராயினும் சரி, அழைக்கப்பட்டவர்களுக்கு அவர் மெசியா, கடவுளின் வல்லமையும், கடவுளின் ஞானமுமானவர்.
25 எனெனில், கடவுளின் மடமை மனிதரின் ஞானத்தை விட ஞானமிக்கது. கடவுளின் வலுவின்மை மனிதரின் வன்மையை விட வன்மை மிக்கது.
26 சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட போது என்ன நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர் மதிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வல்லமையுள்ளவர்கள் எத்தனை பேர்? உயர் குலத்தோர் எத்தனை பேர்?
27 இருப்பினும் ஞானிகளை நாணச்செய்ய மடமை என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்து கொண்டார். வன்மையானதை நாணச் செய்ய வலுவற்றது என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.
28 உலகம் பொருட்படுத்துவதை ஒழித்து விட, உலகம் பொருட்படுத்தாததையும் தாழ்ந்ததெனக் கருதுவதையும், இகழ்ச்சிக்குரியதையும் கடவுள் தேர்ந்து கொண்டார்.
29 எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்.
30 அவர் செயலால் தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறீர்கள், இவரே கடவுளின் செயலால் நமக்கு ஞானத்தின் ஊற்றானார். இறைவனுக்கு நாம் ஏற்புடையவர்களும் பரிசுத்தர்களும் ஆவதற்கு வழியானார். நமக்கு விடுதலை அளிப்பவருமானார்.
31 ஆகவே, மறைநூலில் எழுதியுள்ளபடி, ' பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக'.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×