1 மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினும். அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் ஆனேன்.
2 இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு எனக்கு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.
3 எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும் எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல், எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
4 அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது,
5 இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது.
6 அநீதியைக் கண்டு மகிழ்வுறாது; உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
7 அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்; பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை; நம்பிக்கையில் தளர்வதில்லை; அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்,
8 அன்புக்கு என்றும் முடிவு இராது; இறைவாக்கு வரம் எது இருந்தாலும், அது ஒருநாள் இல்லமாற்போகும்; பரவசப் பேச்சு வரம் இருந்தால், அதுவும் முற்றுப்பெறும்; அறிவு வரம் இருந்தால், அதுவும் ஒருநாள் இல்லாமற் போகும்.
9 ஏனெனில், நமது அறிவு குறைவுள்ளது; நாம் உரைக்கும் இறைவாக்கும் குறைவுள்ளது;
10 நிறைவுள்ளது தோன்றும்பொழுது குறைவுள்ளது மறைந்துவிடும்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையின் பேச்சு குழந்தையின் மனநிலை குழந்தையின் எண்ணம் கொண்டிருந்தேன். நான் பெரியவனாய் வளர்ந்த பின்னர், குழந்தைக்குரியதைக் களைந்துவிட்டேன்.
12 இப்பொழுது கண்ணாடியில் மங்கலாகக் காண்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்க் காண்போம். இப்பொழுது அரை குறையாய் அறிகிறேன்; அப்பொழுது கடவுள் என்னை அறிவதுபோல் நானும் அறிவேன்.
13 எனவே, விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன; இவற்றுள் தலைசிறந்தது அன்பே.