1 மீண்டும், ஆண்டவர் மோயீசனைப் பார்த்து: நீ பாரவோனிடம் சென்று, அவனை நோக்கி: ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பிவிடு.
2 நீ, அனுப்பிவிட மாட்டேன் என்று சொன்னால், இதோ உன் எல்லை முழுதும் தவளைகளால் வதைத்துக் கண்டிப்போம்.
3 ஆறு, கொப்புளித்தாற்போலத் தவளைகளைப் பிறப்பிக்கும். அவை புறப்பட்டு வந்து, உன் வீட்டிலும், உன் படுக்கை அறையிலும், உன் படுக்கையின் மீதும், உன் ஊழியர்களின் வீடுகளிலும், உன் மக்களிடத்திலும், உன் அடுப்புக்களிலும், நீ உண்டு கழித்த எச்சில்களிலும் வந்து ஏறும்.
4 அவ்வாறே தவளைகள் உன்னிடத்திலும், உன் மக்களிடத்திலும், உன் ஊழியர் எல்லாரிடத்திலும் நுழையும் என்று ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லுவாய் என்றார்.
5 மேலும், ஆண்டவர் மோயீசனிடம்: நீ ஆரோனை நோக்கி: ஆறுகளின் மீதும், அருவிகள், சதுப்பு நிலங்கள் மேலும் உன் கையை நீட்டி, எகிப்து நாட்டின் மீது தவளைகள் எழும்பும்படி செய் என்று சொல் என்றார்.
6 அப்படியே ஆரோன், எகிப்தின் நீர் மீதெல்லாம் கையை நீட்டவே, தவளைகள் வெளிப்பட்டு எகிப்து நாட்டை மூடிக் கொண்டன.
7 மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமே செய்து, எகிப்து நாட்டின்மேல் தவளைகள் வரும்படி செய்தனர்.
8 பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: இந்தத் தவளைகள் என்னையும் என் மக்களையும் விட்டு நீங்கும்படி ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள். நானோ, ஆண்டவருக்குப் பலி செலுத்த மக்களை அனுப்பிவைப்பேன் என்றான். அதற்கு மோயீசன்:
9 தவளைகள் உம்மிடத்திலும் உம் வீட்டிலும் உம் ஊழியர்களிடத்திலும் உம் மக்களிடத்திலும் இல்லாமல் ஒழிந்து போய், ஆற்றிலே மட்டும் இருக்கும்படி, நான் உமக்காகவும் உம் ஊழியர்களுக்காகவும் உம் மக்களுக்காகவும் மன்றாட வேண்டிய காலத்தை நீர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.
10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது மோயீசன்: எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகரானவர் இல்லை என்று நீர் அறிந்து கொள்ளும் பொருட்டு, நான் உமது வார்த்தையின் படியே செய்வேன்.
11 தவளைகள் உம்மையும் உம் வீட்டையும் உம் ஊழியர்களையும் உம் மக்களையும் விட்டு நீங்கும். ஆற்றிலே மட்டும் அவை இருக்கும் என்றார்.
12 மோயீசனும் ஆரோனும் பாரவோனை விட்டு அகன்றனர். பின் மோயீசன், தவளைகளை முன்னிட்டுப் பாரவோனுக்குக் கொடுத்திருந்த வாக்கின்படி ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
13 ஆண்டவர், மோயீசன் சொற்படி செய்தருளவே, தவளைகள் வீடுகளிலும் ஊர்களிலும் நிலங்களிலும் மாய்ந்து போயின.
14 மக்கள் அவற்றைப் பெரும் குவியல்களாகச் சேர்த்து வைத்தனர். அதனாலே அந்நாடெங்கும் நாற்றம் எடுத்தது.
15 அதன் பின்னும் பாரவோன், (தவளைகளின் தொல்லை) குறைந்து விட்டது கண்டு, தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டானேயன்றி, ஆண்டவர் திருவுளப்படி அவர்களுக்குச் செவி கொடுத்தானில்லை.
16 அப்பொழுது ஆண்டவர் மோயீசனிடம்: நீ ஆரோனைப் பார்த்து: உன் கையை நீட்டிப் பூமியின் புழுதிமேல் அடி; எகிப்து நாடெங்கும் கொசுக்கள் உண்டாகும் என்பாய் என்றார்.
17 அவர்கள் அப்படியே செய்தனர். ஆரோன் கோலைப் பிடித்தவனாய்க் கையை நீட்டிப் பூமியின் புழுதி மேல் அடிக்கவே, மனிதர்களிடமும் விலங்குகளிடமும் கொசுக்கள் உண்டாகி, எகிப்து நாடெங்கும் பூமியின் புழுதியெல்லாம் கொசு மயமாயிற்று.
18 மந்திரவாதிகள் தங்கள் மந்திர வித்தையினாலே கொசுக்கள் உண்டாகும்படி செய்ய முயன்றனர்; ஆனால் அவர்களால் இயலாது போயிற்று. கொசுக்களோ, மனிதர் மீதும் விலங்குகள் மீதும் நிலைத்திருந்தன.
19 மந்திரவாதிகள் பாரவோனை நோக்கி: இதிலே கடவுளுடைய விரலின் ஆற்றல் இருக்கிறது என்றனர். ஆயினும், பாரவோன் இதயம் கடினமாகவே இருந்தது. ஆண்டவர் கட்டளைப்படி அவன் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
20 மீண்டும் கடவுள் மோயீசனுக்குச் சொல்லுவார்: நாளை அதிகாலையில் நீ எழுந்து, பாரவோன் ஆற்றுக்குப் புறப்பட்டு வரும் நேரத்தில் அவனுக்கு முன் நின்று, ஆண்டவர் இவ்வாறு சொல்லுகிறார்: நமக்கு வழிபாடு செய்யும்படி நம்முடைய மக்களைப் போகவிடு;
21 நமது மக்களைப் போக அனுமதியாவிடில், இதோ நாம் உன் மேலும், உன் ஊழியர்கள் மேலும், உன் மக்களின் மேலும், உன் வீடுகளின் மேலும் எல்லா வித ஈக்களையும் ஏவி விடுவோம். பல வித ஈக்களினால் எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நாடு முழுவதும் நிரப்பப்படும்.
22 அப்படியிருந்தும், அப்பொழுது நமது மக்கள் குடியிருக்கிற யேசேன் பகுதியை அற்புத நிலமாக்கி, அதிலே யாதோர் ஈயும் இல்லாதிருக்கச் செய்வோம். அதன்மூலம் பூமியின் நடுவில் நாமே ஆண்டவரென்று நீயும் அறிந்துகொள்வாய்.
23 இவ்வாறு, நமது மக்களுக்கும் உனது மக்களுக்கும் வேற்றுமை காட்டுவோம். இவ்வேற்றுமை, நாளையே நடக்கும் என்று சொல்லுவாய் என்றார்.
24 ஆண்டவர் அவ்விதமே செய்தார். மிகக் கொடிய ஈக்கள் பாரவோனின் வீடுகளிலும், அவன் ஊழியரின் வீடுகளிலும், எகிப்து நாடெங்கும் உண்டாயின. அத்தகைய ஈக்களால் நாடு கெட்டுப் போயிற்று.
25 அப்பொழுது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து நீங்கள் இங்கேயே உங்கள் கடவுளுக்கு வழிபாடு செய்யுங்கள் என்று அவர்களுக்குச் சொல்ல, மோயீசன்: அவ்வாறு செய்யத் தகாது. ஏனென்றால், எகிப்தியர் வெறுப்பனவற்றைக் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலி செலுத்த வேண்டும்.
26 எகிப்தியர் வழிபட்டு வருவனவற்றை அவர்கள் முன்னிலையிலேயே நாங்கள் அடிப்போமாயின், அவர்கள் எங்களைக் கல்லால் எறிவார்கள் அன்றோ?
27 நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாள் பயணம் செய்து, ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டபடி அவருக்குப் பலி செலுத்துவோம் என்றார்.
28 அப்பொழுது பாரவோன்: உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாலைவனத்திலே பலி செலுத்தும்படி நான் உங்களைப்போக விடுவேன். ஆயினும், நீங்கள் அதிகத்தூரம் போகாதீர்கள். எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் என்றான்.
29 அதற்கு மோயீசன்: நான் உம்மை விட்டுப் புறப்பட்ட உடனே ஆண்டவரை மன்றாடுவேன். நாளை ஈக்கள் பாரவோனையும் அவர் ஊழியர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும். ஆனால், நீர் இனிமேலும் ஆண்டவருக்குப் பலியிட மக்களைப் போக விடாமல் என்னை வஞ்சிக்க வேண்டாம் என்றார்.
30 பிறகு மோயீசன் பாரவோனிடமிருந்து புறப்பட்டுச் சென்று ஆண்டவரை மன்றாடினார்.
31 ஆண்டவர் அவர் சொற்படி அருள்கூர்ந்து, ஈக்கள் பாரவோனையும் அவன் ஊழியரையும் அவன் மக்களையும் விட்டு நீங்கச் செய்தார். அவற்றுள் ஒன்றேனும் மீதியாய் இருக்கவில்லை.
32 ஆயினும், பாரவோன் இதயம் கடினமாய் இருந்ததனால், இம்முறையும் அவன் மக்களைப் போக விடவில்லை.